சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றன. அவர்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதுவரை 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.வும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தீவிரமாக உள்ளன. ஆனால் அதிபர் ஆசாத் பதவி விலக மறுப்பதுடன் போராடும் மக்களை கொன்று குவிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அதற்காக ராணுவத்துக்கு ஈரான், வட கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி கடத்தி வருகிறார்.
எனவே, ஆயுத கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. சிரியாவுக்கு புறப்படும் ஈரான் விமானங்கள் ஈராக் வழியாக தான் பறந்து செல்கின்றன. எனவே, அந்த விமானங்களை தடுத்து நிறுத்தும்படியும், அவற்றில் ஆயுதங்கள் கடத்தப்படுகிறதா என்று சோதனை நடத்தும்படியும் ஈராக்கை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
கடந்த வாரம் ஈராக் தலைநகர் பாக்தாத் வந்த அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் இதுகுறித்து அந்நாட்டு துணை ஜனாதிபதி குதயர் அல்-குஷாயியுடன் பேசினார். அதை தொடர்ந்து தனது வான் எல்லையில் பறக்கும் ஈரான் விமானங்களை இறக்கி ஆயுதம் உள்ளதா? என சோதனை நடத்த ஈராக் முடிவு செய்துள்ளது. இந்த தகவல் ஈரானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிரியாவுக்கு ஆயுத உதவியோ அல்லது நிதி உதவியோ செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை ஈராக் வெளியுறவு மந்திரி ஹோஷியர் ஷெபரி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று வடகொரியா விமானத்தை தரை இறக்கி ஈராக் ஆயுத சோதனை நடத்தியது.