போலீசின் அதிகாரம் குறித்து கேள்வி கேட்பதை நிறுத்த வேண்டும் என்று கோரி என்ஜிஓ- உறுப்பினர்கள் சுமார் 30பேர் கோலாலம்பூரில் வழக்குரைஞர் மன்றத்துக்குமுன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும், போலீஸ் மீதான தாக்குதல்களை, செப்டம்பர் 26-இல், ஜாலான் கூச்சாய் லாமாவில் நிகழ்ந்ததைப் போன்ற சம்பவங்களை வழக்குரைஞர் மன்றம் கண்டிக்கவும் வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
போலீசார் தவறு செய்வதாகக் கூறி அறிக்கை விடுக்கும் மன்றம் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போதும் அறிக்கை விடுக்கத் தவறக்கூடாது என்று Tolak Individu Bernama Anwar Ibrahim (திபாய்) அமைப்பின் ஆன்மிகத் தலைவர் முகம்மட் ஜாஹிட் மாட் அரிப் கூறினார்.
“அச்சம்பவத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுடப்பட்டதைக் கண்டித்து அவர்கள் அறிக்கை விடுக்க வேண்டும்.
“அவர்களிடமிருந்து அறிக்கை எதுவும் வரவில்லை என்றால் அவர்கள் மாற்றரசுக் கட்சிகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருப்பதாகத்தான் மக்கள் நினைப்பார்கள்”, என்று பிகேஆர் இளைஞர் பகுதியின் முன்னாள் துணைத் தலைவரான முகம்மட் ஜாஹிட் கூறினார்.
இரண்டு-பக்க மகஜர்
கடந்த புதன்கிழமை, ஒரு காரிலிருந்த மூவரை விரட்டிச் சென்ற கார்ப்பரல்கள் நோர் அஸ்லான் அபு பக்கார்,42, ஆர். சுப்ரமணியம், 52,ஆகிய இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டனர்.
நோர் அஸ்லானுக்குக் கழுத்திலும் சுப்ரமணியத்துக்கு வயிற்றிலும் கையிலும் காயங்கள் ஏற்பட்டன.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இன்னொரு அமைப்பான Gabungan Anti-Penyelewengan Selangor(கேப்ஸ்)-இன் தலைவர் ஹமிட்சுன் கைருடின், இரண்டு-பக்க மகஜர் ஒன்றை உரக்க வாசித்துவிட்டு வழக்குரைஞர் மன்ற பிரதிநிதி ஒருவரிடம் அதை ஒப்படைத்தார்.
போலீஸ்படை மக்களின் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநிறுத்த பாடுபடும் வேளையில் வழக்குரைஞர் மன்றம் அதன்மீது குறைகாண்பதையும் அதன் செயல்கள் குறித்துக் கேள்வி எழுப்புவதையுமே வழக்கமாகக் கொண்டிருக்கிறது என்றவர் கூறினார்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் மலாய் உரிமைக்காக போராடும் பெர்காசா, ஜாரிங்கான் மலாயு மலேசியா (ஜேஎம்எம்) ஆகியவையும் கலந்துகொண்டன.