வாக்காளர் பட்டியல் துப்புரவுபடுத்தப்பட மக்கள் சக்தியே காரணம்

வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டிவந்துள்ள பாஸ் இளைஞர் பகுதி, தேர்தல் ஆணையம்(இசி) 70,361 பெயர்களை அப்பட்டியலிலிருந்து நீக்கியது “மக்களுக்குக் கிடைத்த வெற்றி” என்று வருணித்துள்ளது.

இசி, ஜூலைக்கும் செப்டம்பர் 15-க்குமிடையில் தேசிய பதிவுத்துறையின்(என்ஆர்டி) ஒத்துழைப்புடன் இறந்துபோன 69,293 வாக்காளர்களின் பெயர்களையும் குடியுரிமை பறிக்கப்பட்ட 1068 பேரின் பெயர்களையும் அப்பட்டியலிலிருந்து நீக்கியது. 

அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் இசியும் என்ஆர்டியும் சேர்ந்து வாக்காளர் பட்டியலைத் துப்புரவுபடுத்தும் பணியை மேற்கொண்டதாக இசி செயலாளர் கமருடின் முகம்மட் பாரியா நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் தவறுகள் நிகழாமலிருக்க மேலும் 50,000 வாக்காளர்களின் தகுதிகளை இசி ஆராய்ந்து வருவதாகவும் அவர் சொன்னார்.

“இந்த ஆய்வுக்கு இசி, என்ஆர்டி, ஆயுதப்படைகள், போலீஸ்படை போன்றவற்றிடமிருந்து தகவல்கள் பெற வேண்டியுள்ளது”, என்றாரவர்.

இதற்கு எதிர்வினையாக இன்று ஓர் அறிக்கை வெளியிட்ட ஜோகூர் பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்சான் காயாட், அந்தப் புள்ளிவிவரம் இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் சொன்னது பொய் என்பதை நிரூபிக்கிறது என்றார்.

பட்டியலிலிருந்து அகற்றப்பட்ட பெயர்களையும் இப்போது பரிசீலனை செய்யபப்டும் பெயர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் 120,361 ஆகிறது.இது, மொத்த வாக்காளர் தொகையில் 0.98 விழுக்காடு. ஆகஸ்ட் 9-இல் அவர் கூறியதுபோல் 0.0001விழுக்காடு அல்ல.

“பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை பெரிது.இதுவே, எழுத்தர்களின் கவனக்குறைவுதான் இதற்குக் காரணம் என்று இசி துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் கூறியிருப்பது தவறென்பதைக் காண்பிக்கிறது. கவனக்குறைவால் இசி தரவுத்தளத்தில் பல்லாயிரக்கணக்கான தவறுகள் நிகழ்வது அசாத்தியம்”, என்று சுஹாய்சான் கூறினார்.

மக்கள் விடாமல் தொடர்ந்து கொடுத்துவந்த அழுத்தத்தின் விளைவாகத்தான் பெயர்கள் நீக்கப்பட்டன, மற்றவர்களின் வாக்காளர் தகுதிகளும் ஆராயப்பட்டு வருகின்றன என்றாரவர்.

“இந்த அழுத்தம் பெர்சே 2.0 பேரணி வடிவில் தொடங்கியது. அதன்பின்னர் பாஸ் இளைஞர்கள் பல விசயங்களை அம்பலப்படுத்தித் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார்கள். மக்களின் வலுவான அழுத்தமின்றி இந்தத் துப்புரவுப்பணி நடந்திராது. அந்த வகையில் மக்களுக்குப் பாராட்டு தெரிவிக்கிறோம்.”

வாக்காளர் பட்டியலைத் துப்புரவுபடுத்தும் பணிக்கு உள்துறை அமைச்சர்தான் இடையூறாக இருப்பார்.அவரைச் சமாளிப்பது இசி-க்குப் பெரிய சவாக இருக்கும் என்றவர் குறிப்பிட்டார்.

“அரசாங்கம் பிஎன்னிடம் இருக்கும் வரை விசாரணை முடிவுகள் வெளியில் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

“போலி மைகார்டுகளை வைத்து நடத்தப்படும் தில்லுமுல்லுகள் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமானல் அடுத்த பொதுத்தேர்தலில் பிஎன் அரசைக் கவிழ்க்க வேண்டும்”, என்றாரவர்.

TAGS: