தனிப்பட்ட அறிவிப்புகளைச் செய்ய வேண்டாம்: அஸ்மின் அலிக்கு பாஸ் எச்சரிக்கை

சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் பொதுத்தேர்தலுக்குப் பின்னர் மாற்றப்படலாம் என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியது குறித்து வருத்தம் தெரிவித்த பாஸ், பக்காத்தான் ரக்யாட் ஒன்றும் அப்படி முடிவு செய்யவில்லை என்றது.

அது அஸ்மினின் சொந்த கருத்தாக இருக்கலாம் என்று தம் கட்சி கருதுவதாகக் குறிப்பிட்ட பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி, அது மக்களிடையே குழப்பத்தை உருவாக்கும் என்றார்.

அஸ்மினும்(இடம்) சிலாங்கூர் பிகேஆர் தகவல் தலைவர்  சுஹாய்மி ஷாபியும், பக்காத்தான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் அமைச்சரவையை 20 பிகேஆர் தலைவர்கள்  அலங்கரிப்பர் என்று கூறியிருப்பது பற்றியும் முஸ்தபா வருத்தம் தெரிவித்தார்.

“சுஹாய்மிதான் முதலில் அறிக்கை விடுத்தார் சிலாங்கூருக்குப் புதிய மந்திரி புசார் என்று. அதைத் தொடர்ந்து அஸ்மினும் அதே போன்று அறிக்கை ஒன்றை விடுத்தார்.

“அது பற்றியெல்லாம் (பக்காத்தானில்) விவாதிக்கப்படவில்லை. அது எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தி விடும்”,என்றவர் கூறியதாக ஹராகா டெய்லி கூறியுள்ளது.

மாற்றரசுக் கூட்டணியில் ஒன்றுகூடியும் கூட்டணி உணர்வுடனும் முடிவுகள் செய்யப்படுகின்றன என்று கூறிய முஸ்தபா இப்படிப்பட்ட அறிக்கைகள் பக்காத்தான் உறுப்புக் கட்சிகள் குறித்து தப்பான எண்ணத்தை ஏற்படுத்தி விடும் என்றார்.

இன்றைய சினாரான் ஹரியான் நாளேட்டின் முதல் பக்கத்தில் அஸ்மினை மேற்கோள் காட்டி பக்காத்தான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் சிலாங்கூர் மந்திரி புசார் மாற்றப்ப்படுவார் என்று வெளிவந்துள்ள செய்தி குறித்து பாஸ் தலைமைச் செயலாளர் கருத்துரைத்தார்.

கோம்பாக் எம்பியுமான அஸ்மின், அது (காலிட்டை மாற்றுவது) பற்றி பக்காத்தான் ரக்யாட்டில் பேச்சு நடப்பதாகவும் ஆனால், இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.

TAGS: