பிகேஆர்: பெங்கெராங் திட்டம் என்ற போர்வையில் நில அபகரிப்பு

பெங்கெராங் பெட்ரோலியவேதியியல் திட்டம் என்ற பெயரில் நிலத்தைப் பெருமளவில் அபகரித்து அவரின் அல்லக்கைகளைப் பணக்காரர்களாக்க ஜோகூர் மந்திரி புசார் கனி ஒத்மான் திட்டமிட்டிருக்கிறார் என பிகேஆர் உதவித் தலைவர் சுவா ஜூய் மெங் கூறியுள்ளார்.

அந்த பெட்ரோனாஸ் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலியவேதியியல் ஒருங்கிணைப்புத் திட்டத்தை(ரெபிட்)  முதலில் சிலாங்கூரில் அமைக்க நினைத்து அதற்காக 2,889 ஏக்கர் நிலமும் கோரப்பட்டதாக சுவா கூறினார் . ஆனால், பின்னர் அது ஜோகூருக்குக் கொண்டு செல்லப்பட்டு அதற்காக 6,400 ஏக்கர் நிலத்தை பெட்ரோனாஸ் கோரியது.

ஆனால், இப்போது கட்டம் கட்டமாக  நிலம் அகப்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது முடிவில் அப் பெங்கெராங் திட்டம்  22,500 ஏக்கரை விழுங்கி ஏப்பமிடும் என்று தோன்றுவதாக ஜோகூர் பிகேஆர் தலைவருமான சுவா குறிப்பிட்டார்.

“இதிலிருந்து கனி ஒத்மானின் நோக்கம் தெரிகிறது. குறைந்த விலையில் வாங்கி நில வங்கி ஒன்றை உருவாக்கப் பார்க்கிறார்.

“குறைந்த விலையில் வாங்கி தம் அல்லக்கைகளிடம் குறைந்த விலைக்கே விற்பதுதான் அவரின் திட்டம்.  அந்த அல்லக்கைகள் விவசாய நிலமாக இருப்பதை மேம்பாட்டு நிலமாக மாற்றுவார்கள் பின்னர் விலையை ஆயிரம் மடங்கு அல்லது அதற்கும் கூடுதலாக உயர்த்துவார்கள்”. பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் சுவா இவ்வாறு கூறினார்.

TAGS: