பக்காத்தானுக்கு பொறாமை, பகைமை என்கிறார் அலி ரூஸ்தாம்

பக்காத்தான் தேசிய சாதனையை ஏற்படுத்தியுள்ள தமது புதல்வர் திருமணத்திலிருந்து பிரச்னைகளை உருவாக்குவதாக மலாக்கா முதலமைச்சார் முகமட் அலி ரூஸ்தாம் சாடியிருக்கிறார்.

அவர் நேற்று ஆயர் குரோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். எதிர்க்கட்சிகள் அந்த விஷயத்தை அரசியல் ஆதாயமாக்க முயலுகின்றன என்றும் அவற்றின் நடவடிக்கைகள் பற்றித் தாம் கவலைப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

“அவை வெறுப்பைக் காட்டுகின்றன. அவற்றுக்கு வேறு வேலை ஏதுமில்லை. Gasak dia oranglah ( அவை தொலையட்டும்) தாங்கள் விரும்புவதை அவை செய்யட்டும்.”

130,000 பேருக்கு மேல் என் (திறந்த) இல்லத்துக்கு வந்தனர். அது மலேசியச் சாதனையாகி விட்டது. நான் என்ன செய்ய முடியும் ?”

“நல்ல வேளையாக அது என் புதல்வரது திருமணமாக இருந்தது. நான் மீண்டும் திருமணம் செய்தால் இன்னும் அதிகமான மக்கள் வந்திருப்பர்,” என அவர் புன்னகையுடன் கூறினார்.

“அவர்கள் பிஎன் -னை ஆதரிப்பதால் அங்கு வந்தனர். ஆனால் பிஎன் -னை ஆதரிக்காதவர்களும் வந்தனர்.”

மாநில அரசாங்க நிறுவனங்கள் ‘ஆதரவு அளித்தன’

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பைக் காட்டிலும் கூடுதலாக பெரும் கூட்டம் அந்தத் திருமண நிகழ்வுக்கு வந்தது என்ற தகவல்  வெளியானதும் அதற்கான செலவுகளை யார் செய்தது என பக்காத்தான் தலைவர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

நேற்று “அதிகார அத்துமீறல் பற்றியும் மாநில நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டது பற்றியும்” மலாக்கா பக்காத்தான் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்தது.

அந்தத் திருமணத்துக்கான செலவுகளை அறிவிக்குமாறு பக்காத்தான் விடுத்துள்ள சவாலுக்குப் முகமட் அலி இவ்வாறு பதில் அளித்தார்:

“லிம் கிட் சியாங்-கும் லிம் குவான் எங்- தங்கள் திருமணங்களுக்கு எவ்வளவு செலவு செய்தனர் என்பதை அறிவிக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். மாட் சாபு எவ்வளவு செலவு செய்தார் ? மற்ற முதலமைச்சர்களைப் பற்றி என்ன சொல்வது ? அவர்களையும் வெளியிடுமாறு கேளுங்கள்,” என்றார் அவர்.

திருமணத்துக்குக் கிட்டத்தட்ட 600,000 ரிங்கிட் செலவானது என முகமட் அலி செவ்வாய்க் கிழமை தி ஸ்டார் நாளேட்டிடம் கூறியிருந்தார்.

 

TAGS: