வல்லுநர்கள்: எம்ஏசிசி நடைமுறைகளே தவறானது, சட்டத்தில் அல்ல

ஊழல் அரசியல்வாதிகளை பிடிப்பதற்கு தான் திறமையாக இயங்குவதற்கு சில சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறுவதை சட்ட நிபுணர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

நடப்புச் சட்டங்களில் காணப்படும் ‘சில பழைய விதிகள்’ தனக்குத் தடையாக இருப்பதாக எம்ஏசிசி சொன்னதாக ஊழல் மீதான நாடாளுமன்ற சிறப்புக் குழு உறுப்பினர்களில் ஒருவரான குபாங் கெரியான் எம்பி சலாஹுடின் அயூப் புதன் கிழமை தெரிவித்திருந்தார்.

எடுத்துக்காட்டுக்கு செல்வந்தரான மாநிலத் தலைவர் ஒருவர் மீது ஆறு  விசாரணை அறிக்கைகள் தயாரிக்கப்பட்ட போதிலும் சட்டத்தில் உள்ள கோளாறுகள் காரணமாக அவர் மீது வழக்குப் போட முடியவில்லை என எம்ஏசிசி நாடாளுமன்றக் குழுவிடம் கூறியதாகவும் சலாஹுடின் சொன்னார்.

2009ம் ஆண்டுக்கான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் 23வது 50வது பிரிவுகள் திருத்தப்பட வேண்டும் என எம்ஏசிசி விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அந்த இரண்டு பிரிவுகளும் திருத்தப்பட வேண்டும் எனச் சொல்வதை மூத்த வழக்குரைஞரான பல்ஜித் சிங் சித்து ஒப்புக் கொள்ளவில்லை. அவர் சட்டக் கல்வியையும் போதித்து வருகிறார்.

“உண்மையில் அந்த 23வது பிரிவு ஹாங்காங் சட்டத்தைப் போன்றது, அதிலிருந்து எடுக்கப்பட்டது.  ஆகவே அந்தச் சட்டம் பழமையானது என ஏன் எம்ஏசிசி கூறிக் கொள்கிறது என்பது எனக்குப் புரியவே இல்லை. அத்துடன் அண்மையில் தான் அந்தச் சட்டம் இயற்றப்பட்டது (மூன்று ஆண்டுகளுக்கு முன்பு)

“உங்களிடம் குற்றவியல் சட்டம், அவசர கால ஆணை ஆகியவற்றின் கீழ் உள்ள 1997ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்ட விதிகள் உள்ளன. வேறு எந்த சட்டம் எம்ஏசிசி-க்கு தேவை ?” என அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

பழைய முறைகளே பிரச்னை, சட்டங்கள் அல்ல

அதற்குப் பதில் எம்ஏசிசி தனது விசாரணை முறைகளை மேம்படுத்திக் கொண்டு ஒரு வழக்கில் வெற்றி பெறுவதற்கு ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் நம்பியிருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

ஒப்புதல் வாக்குமூலம் 2006ம் ஆண்டு தொடக்கம் நீதிமன்றங்களில் சாட்சியமாகப் பயன்படுத்தப்படுவதும் இல்லை. ஏற்றுக் கொள்ளப்படுவதும் இல்லை.

“மற்ற வழிகளும் இருப்பதால் அது ஆதாரங்களைத் திரட்டுவதற்கு வாக்குமூலத்தை பதிவு செய்வதை மட்டும் நம்பியிருக்கக் கூடாது,” என்றார் அவர்.

அதே போன்று  சட்டத்துக்கு விளக்கமளிக்கும் விவகாரத்தை நீதிமன்றங்களிடம் விட்டு விடுவதே நல்லது என இன்னொரு மூத்த வழக்குரைஞரான சிவி பிராபகரன் கூறினார்.

போதுமான ஆதாரம் இருந்தல் தனிநபர்கள் மீது குற்றம் சாட்டுவது மட்டுமே எம்ஏசிசி-யின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

வெகுமதிகளைப் பெறுவதற்கு அலுவலகத்தைப் பயன்படுத்துவது சம்பந்தப்பட்ட 23வது பிரிவும் சில குற்றங்கள் தொடர்பான 50வது பிரிவும் ‘நல்ல சட்டங்கள்’ என பிரபாகரன் சொன்னார்.

எம்ஏசிசி- யின் விரக்தி குறித்து அனுதாபம் தெரிவித்த அவர், அதற்கு முன்பு இருந்த ஊழல் தடுப்பு நிறுவனம் (ஏசிஏ) கடந்த காலத்தில் வலிமையான அரசியல்வாதிகளுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்களை நிரூபித்துள்ளதைச் சுட்டிக் காட்டினார்.

அப்போது ஏசிஏ நல்ல பலனைத் தருவதற்கு அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்தியது என அவர் சொன்னார்.

எம்ஏசிசி காரணங்களைச் சொல்கிறது

எம்ஏசிசி சொன்னதாக சலாஹுடின் குறிப்பிட்டுள்ள விஷயங்கள், பெரிய மீன்களை பிடிப்பதற்குத் தனக்கு வலிமை இல்லை என்பதை மறைப்பதற்கு அந்த ஊழல் தடுப்பு ஆணையம் காரணங்களைச் சொல்கிறது என முன்னாள் எம்ஏசிசி ஆலோசனைக் குழு உறுப்பினரான ரோபர்ட் பாங் கூறினார்.

எடுத்துக்காட்டுக்கு சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லுக்கும் முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசானுக்கும் எதிராக கூறப்பட்ட பல குற்றச்சாட்டுக்களை எம்ஏசிசி அலட்சியம் செய்துள்ளது. அந்த இருவருக்கும் எதிராக புகார் எதுவும் செய்யப்படவில்லை என சில வேளைகளில் காரணம் சொல்லப்பட்டது.

“விசாரணைகளைத் தொடங்குவதற்கு எந்த ஊடகச் செய்தியைக் கூட முதல் தகவல் அறிக்கையாக பரிசீலிக்கப்பட முடியும் என்பது எனக்கும் உங்களுக்கும் நன்கு தெரியும்,” என்றார் அவர்.

 

TAGS: