மலாக்கா முதலமைச்சர் முகம்மட் அலி ருஸ்தம் மகனின் திருமண விருந்து ஊழல்மீது மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணையைத் தொடக்கியுள்ளது.
“நாங்கள் விசாரித்து வருகிறோம்…….எவ்வளவு செலவானது, செலவிட்டது யார் என ஒவ்வொன்றாக ஆராய்ந்து வருகிறோம்”, என எம்ஏசிசி துணைத் தலைவர் (நடவடிக்கை) முகம்மட் ஷுக்ரி அப்துல் இன்று கோலாலம்பூரில் தெரிவித்தார்.
ஆனால், விசாரணை இப்போதுதான் தொடங்கியது என்பதால் மேல்விவரம் எதனையும் அவரால் வெளியிட இயலவில்லை.
செப்டம்பர் 30-இல் 130,000 பேர் கலந்துகொண்ட திருமண விருந்துக்கு ரிம600,000 செலவானதாக முகம்மட் அலி கூறியிருந்ததைத் தொடர்ந்து பிகேஆர் இளைஞர் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டர் முகம்மட் அகின் நேற்று எம்ஏசிசி-இல் புகார் செய்தார்.
திருமணத்தின் பல அங்கங்கள் அரசு துறைகளின் ஆதரவில் நடந்தன என்றும் அதற்கு மலாக்கா மாநில மேம்பாட்டுக் கழக(பிகேஎன்எம்) தலைமைச் செயல் அதிகாரி யூசுப் ஜந்தான் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தின் குறிப்புகளே சான்று என்றும் பாஸின் பொக்கோக் செனா எம்பி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.