சிந்தனைக்குழு: பிஎன்-னும்தான் அமெரிக்க நிதியுதவி பெறுகிறது

வெளிநாட்டு நிதி உதவி என்றதும் பிஎன் “அரண்டுபோக” வேண்டியதில்லை, ஏனென்றால் ஆளும் கூட்டணிக்கும்கூட அமெரிக்க உதவி கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது என்கிறது ஒரு சிந்தனைக்குழு.

“மலேசிய என்ஜிஓ-களுக்கு வெளிநாட்டு நிதியுதவி கிடைப்பதை நினைத்து பாரிசான் எம்பிகள் அரண்டுபோய் அலற வேண்டியதில்லை”, என்று ஜனநாயக, பொருளாதார விவகாரங்கள் மீதான கழக (ஐடியாஸ்)த் தலைவர் வான் சைபுல் வான் ஜான், மலேசியாகினிக்கு அனுப்பி வைத்த மின்னஞ்சலில் கூறினார்.

“பாரிசான் நேசனல் கட்சிகளுக்கும்தான் அமெரிக்க உதவி கிடைக்கிறது, ஆகக் கடைசியாக, கடந்த வார இறுதியில் கோலாலம்பூரில் உள்ள ஆட,,ம்பர தங்குவிடுதி ஒன்றில் அப்படிப்பட்ட உதவியளிப்பு நடைபெற்றது.

“இது ஒன்றும் புதிதல்ல. பாரிசான் நேசனல் தலைவர்கள் பல ஆண்டுகளாகவே இப்படிப்பட்ட உதவிகளைப் பெற்று வருகிறார்கள்”, என்றவர் கூறினார்.

நேற்று நாடாளுமன்றத்தில் பங் மொக்தார் ரடின் (பிஎன்- கினாபாத்தாங்கான்), அப்துல் ரஹ்மான் டஹ்லான் (பிஎன்- கோத்தா பெலுட்) ஆகியோர் வெளிநாட்டிலிருந்து நிதியுதவி செய்வோர் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியதற்கு எதிர்வினையாற்றிய வான் சைபுல் (இடம்) இவ்வாறு கூறினார்.

வெளிநாட்டு நிதியுதவி பெற்ற மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமை அரசாங்கத் துறைகளும் அரசாங்க-ஆதரவு அமைப்புகளும் பிஎன் கட்டுப்பாட்டில் உள்ள மைய நீரோட்ட ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு தாக்கி வருகின்றன.

அது, அரசாங்கத்தின் பெயரைக் கெடுப்பதற்காகவே பிரான்சில்  ஸ்கோர்பியன் ஊழல்மீது விசாரணையைத் தூண்டி விட்டிருப்பதாக அவை குற்றம் சாட்டியுள்ளன.

அவர்கள் மலேசியாகினியையும் விட்டு வைக்கவில்லை. அந்த இணையச் செய்தித்தளம் “அரசாங்க-எதிர்ப்பு”ச் செய்திகளை வெளியிடுவதற்காகவே வெளிநாட்டு நிதியுதவியாளர்களால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரசு-ஆதரவு’அமைப்புக்கு கிறிஸ்துவ அமைப்பிடமிருந்து நிதியுதவி

“அரசாங்கத்துக்கு அணுக்கமாகவுள்ள பல அமைப்புகளும்”கூட வெளிநாட்டு நிதியுதவியைப் பெறுவதாக வான் சைபுல் தெரிவித்தார்.

“அரசாங்கத்துக்கு நெருக்கமான ஒரு சிந்தனைக்குழு வெளிநாட்டில் உள்ள ஒரு கிறிஸ்துவக் கட்சியுடன் தொடர்புள்ள அறக்கட்டளை ஒன்றிடமிருந்து உதவி பெறுகிறது. அதற்கான ஆதாரம் என் முன்னே இருக்கிறது.

“என்ஜிஓ-கள் வெளிநாட்டு நிதியுதவி பெறுவது வழக்கமான ஒன்றுதான்”,என்றாரவர்.

அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகள் வருவதை விரும்புகிறது. அவற்றால் நாட்டுக்கு நன்மை எனக் கருதப்படுகிறது. அதேபோல் நாட்டின்  சமுதாய அமைப்புகளுக்கு உதவும் நிதிகளையும் கருத வேண்டும்.

“கடந்த வாரம் பிஎன் கட்சிகள் பெற்ற வெளிநாட்டு உதவி,  நிச்சயம் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கில் கொடுக்கப்பட்டதாக இருக்காது. அரசாங்க அமைப்பை வலுப்படுத்துவதற்காக அது கொடுக்கப்பட்டிருக்கும்.

“அப்படிப்பட்ட ஆதரவை வரவேற்க வேண்டும். பழித்துரைக்கக் கூடாது”, என்றவர் சொன்னார்.

TAGS: