எரிபொருள் விலைகளைக் குறைப்பது, டோல் கட்டணங்களை அகற்றுவது உட்பட பக்காத்தான் ராக்யாட் தேர்தல் வாக்குறுதிகள் அதன் நிழல் வரவு செலவுத் திட்டத்தில் காணப்படாதது குறித்து விவசாய, விவசாய அடிப்படை தொழிலியல் அமைச்சர் சுவா தீ யோங் கேள்வி எழுப்பியுள்ளார்.
“சிறந்த பட்ஜெட், மக்களுக்காக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம்” என கூறப்பட்டுள்ள பக்காத்தான் நிழல் பட்ஜெட்டில் அது நாட்டுக்கு வாக்குறுதி அளித்துள்ள பெட்ரோல் விலைக் குறைப்பு காணப்படவில்லை என அவர் கிண்டலாகக் கூரினார்.
“அந்த முக்கியமான அறிவிப்புக் கூட அதன் 2013ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கூட பதிவு செய்யப்படவில்லை. அப்படி என்றால் அது எப்படி பெட்ரோல் விலையைக் குறைக்கப் போகிறது ? மதிப்பீட்டுக் கணக்குகள் எங்கே ?”
“அது மட்டுமல்ல. பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் டோல் கட்டணங்களை அகற்றப் போவதாகவும் அது வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால் அதுவும் அதன் வரவு செலவுத் திட்டத்தில் காணப்படவில்லை.”
என்றாலும் இம்மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட பக்காத்தான் நிழல் வரவு செலவுத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நெடுஞ்சாலைகளில் 6 பில்லியன் ரிங்கிட் செலவு பிடிக்கக் கூடிய டோல் கட்டணத்தை அகற்றும் நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்பட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மாதம் ஒன்றுக்கு 1,100 ரிங்கிட் என்ற பக்காத்தானுடைய குறைந்த பட்ச சம்பளக் கொள்கையையும் சுவா குறை கூறினார். பிஎன் அறிவித்த குறைந்த பட்சச் சம்பளம் 900 ரிங்கிட் ஆகும்.
“வேலை செய்யும் பிரிவினருக்கு அது நல்ல நடவடிக்கை என பக்காத்தான் தம்பட்டம் அடித்துக் கொண்டுள்ளது. ஆனால் அது உண்மை அல்ல. அந்த நடவடிக்கை நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும். கால ஒட்டத்தில் மக்களுக்கும் பெரும் சுமையாகி விடும்,” என்றார் சுவா.
மலேசியாவில் மூன்று மில்லியன் அந்நியத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 200 ரிங்கிட் கூடுதலாக சம்பளம் கொடுத்தால் அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு மொத்தம் 7.2 பில்லியன் ரிங்கிட்டை அனுப்புவார்கள் என சுவா விளக்கினார்.
“நாம் 1,100 ரிங்கிட் குறைந்த பட்சச் சம்பளத்தை அமலாக்கினால் நமக்கு ஆண்டுதோறும் 7.2 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்படும். அந்த 7.2 பில்லியன் ரிங்கிட் செலவை யார் சுமக்கப் போகிறார்கள் ? அதற்கான பதில் மக்கள் என்பதே !”
2013ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து 900 ரிங்கிட் குறைந்த பட்ச சம்பளத்தை அறிமுகம் செய்ய பிஎன் முடிவு செய்துள்ளது. அதற்கான சட்டம் இவ்வாண்டு ஜுலை முதல் தேதி அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்டது.