சுவாராம் வழக்குரைஞர்கள் விளக்கக் கூட்டத்தை சிங்கப்பூருக்கு மாற்றலாம்

ஸ்கார்ப்பின் விசாரணை தொடர்பான விவரங்களை சுவாராம் வழக்குரைஞர்கள் எம்பி-க்களுக்கு பெரும்பாலும் சிங்கப்பூரில் விளக்கமளிக்கக் கூடும். ஏற்கனவே அந்த விளக்கக் கூட்டத்தை மலேசியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

அந்த விவரங்களை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று வெளியிட்டார்.

அந்த வழக்குரைஞர்கள் மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அச்சமே இட மாற்றத்துக்குக் காரணம் என அவர் சொன்னார். அந்த வழக்குரைஞர்களில் ஒருவரான வில்லியம் போர்டோன் ஏற்கனவே நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

பெரும்பாலும் நவம்பர் மாதம் அந்தக் கூட்டம் சிங்கப்பூரில் நிகழக் கூடும் என அன்வார் மலேசியாகினியிடம் தெரிவித்தார். அவர் நேற்று பாரிசில் ‘அரபு எழுச்சி முஸ்லிம் எழுச்சியாக மாறும் சாத்தியம் உண்டா ?’ என்னும் தலைப்பில் முக்கிய உரை நிகழ்த்தினார்.

சிறந்த அரசியல் சேவை, பொருளாதார சிந்தனை, நல்ல ஆளுமைக்கான போராட்டம், சுதந்திரம், சகிப்புத்தன்மை, நீதி ஆகிய கோட்பாடுகள் ஆகியவற்றுக்காக முஸ்லிம் சமூக அறிவியலாளர் சங்கத்தின் (பிரிட்டன்) 2010ம் ஆண்டுக்கான ஆயுட்கால விருது அவருக்கு அப்போது வழங்கப்பட்டது.

ஸ்கார்ப்பின் விசாரணை தொடர்பில் மக்களவை உறுப்பினர்களுக்கு விளக்க மலேசியாவுக்கு வருவதற்கு வழக்குரைஞர்களான வில்லியம் போர்டோனும் ஜோசப் பிரெஹாமும் இணங்கியுள்ளதாக நேற்று அன்வார் தெரிவித்திருந்தார்.

கடந்த ஜுலை மாதம் போர்டோன் தமது சமூக வருகை அனுமதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட பின்னர் மலேசிய அதிகாரிகள் அவரை நாட்டிலிருந்து வெளியேற்றினர்.

சுவாராம் வழக்குரைஞர்கள் என்ற முறையில் இருவரும் மலேசியாவுக்கு வந்து வேலை செய்வதற்குஅனுமதி கோரி சமர்பிக்கப்பட்ட விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.

ஸ்கார்ப்பின் கொள்முதலில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவது மீது மலேசிய அரசாங்கமும் சட்ட அமலாக்க அதிகாரிகளும்  விசாரணை மேற்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து சுவாராம் பிரஞ்சு நீதிமன்றங்களுக்கு விண்ணப்பம் செய்து கொண்டது.

பிரஞ்சுச் சட்டத்தின் கீழ் நீதித் துறையே விசாரணைகளைத் தொடங்க முடியும். அத்துடன் பிரஞ்சு நிறுவனம் ஒன்று குத்தகைகளைப் பெறுவதற்கு அந்நிய அரசாங்கங்களுக்கு கையூட்டுக்களைக்  கொடுப்பது பிரான்ஸில் குற்றமாகும்.

‘அரசாங்கம் அரபு எழுச்சி குறித்து அஞ்சுகிறது’

அன்வார் தமது உரையில் முஸ்லிம் எழுச்சி ஏற்பட வேண்டுமானால் மத்திய கிழக்கில் உள்ள நாடுகளும் மற்ற முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளும் பெயரளவில் மட்டுமின்றி உண்மையாகவே அரசமைப்புக்கு உட்பட ஜனநாயகங்களை அமைக்க வேண்டும் என்றார்

“சட்டப்பூர்வ அதிகாரத்தை உறுதி செய்வதற்கு சுதந்திரமான நியாயமான தேர்தல்களை நடத்துவதே அதற்கு முதலாவதும் முக்கியமானதுமான நடவடிக்கையாக இருக்கும்.”

ஒரு நாடு உண்மையான ஜனநாயகம் எனக் கருதப்பட வேண்டுமானால் அது அது சட்ட ஆட்சியைப் பின்பற்ற வேண்டும், நீதித் துறை சுதந்திரத்தை நிலை நிறுத்த வேண்டும்,  ஆண்-பெண் சம நிலை வேண்டும், சுதந்திரமான ஊடகங்கள் வேண்டும் என அவர் மேலும் சொன்னார்.

“எடுத்துக்காட்டுக்கு மலேசியாவில் நான் எதிர்த்தரப்புத் தலைவராக இருந்த போதிலும் எனக்கு தொலைக்காட்சியில் ஒரு நிமிடம் கூட கிடைப்பது இல்லை. இது என்ன ஜனநாயகம் ?” என அன்வார் வினவினார்.

“மலேசியா துடிப்புமிக்க மிதவாத முஸ்லிம் ஜனநாயகமாகக் கருதப்படுகின்றது,”என அவர் வேடிக்கையாக கூறினார்.

மலேசியாவில் அரபு எழுச்சி ஏற்படும் என அஞ்சி அரசாங்கம் சுதந்திரத்துக்கு ஆதரவான, ஜனநாயகத்துக்கு ஆதரவான அமைப்புக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளது என்றார் அவர்.

“அவற்றைத் தாக்கும் கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிடுமாறு அரசாங்கக் கட்டுக்குள் இருக்கும் ஊடகங்களுக்குப் பணிக்கப்படுகின்றது. ஆதாய நோக்கமில்லாத அந்த அமைப்புக்கள் சட்டப்பூர்வ அரசாங்கங்களை நிலை குலையச் செய்து பேராளர் அரசுகளை நியமிக்க முயற்சி செய்வதாகவும் அந்த ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன,” என அன்வார் மேலும் சொன்னார்.

TAGS: