எக்கானாமிஸ்ட் சஞ்சிகை: நஜிப் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் பிரவுனைப் போன்றவர்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிரிட்டனில் தாம் செல்வாக்குடன் இருந்த காலத்தில் தேர்தலை நடத்தத் தவறிய முன்னாள் பிரதமர் கோர்டோன் பிரவுனைப் போன்றவர் என பிரபலமான அனைத்துலக வார சஞ்சிகையான எக்கானாமிஸ்ட் கூறுகிறது.

பிரவுனுக்கு முன்பு பிரதமராக இருந்த டோனி பிளாய்ரைப் போன்று முன்னேற்ற சிந்தனை உடைய தம்மைக் காட்டிக் கொள்ள நஜிப் முயன்ற போதும் ( பிளாய்ரின் ஆலோசகர்களை நஜிப் தமக்கு யோசனை கூற நியமித்தார்) அவர் பிரவுனைப் போன்று தான் உள்ளார்.

“பிரவுன் பல ஆண்டுகளுக்கு தமது எதிரியை ஒதுக்குவதற்கு தயங்கினார். ஆனால் அதில் அவர் வெற்றி கண்டு தமது செல்வாக்கு உயர்வாக இருந்த நேரத்தில் முன் கூட்டியே தேர்தலை நடத்தத் தவறி விட்டார்,” என லண்டனைத் தளமாகக் கொண்ட அந்த சஞ்சிகை கூறியது.

“தமது சொந்த செல்வாக்கைப் பயன்படுத்தத் தவறியதோடு தேர்ந்தெடுக்கப்படாத, உறுதியில்லாத பிரவுன் தமது அதிகாரம் சரிவதைக் கண்டார். இறுதியில் தமது தவணைக் காலம் முடியும் தறுவாயில் அவர் தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலையில் சிக்கிக் கொண்டார்- அதில் அவர் தோல்வியும் கண்டார்.”

கடந்த பொதுத் தேர்தலில் ஆளும் பிஎன் கூட்டணி நாடாளுமன்றத்தில் தனது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்த எதிர்பாராத பின்னடவைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியை வீழ்த்திய பின்னர் பிரவுன் எதிர்நோக்கிய அதே சூழ்நிலையை நஜிப்பும் எதிர்கொண்டதாக எக்கானாமிஸ்ட் இன்று வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்தது.

அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தமது வாய்ப்புக்கள் பற்றி நஜிப் கடந்த ஆண்டு ஜுன் மாதம் தொடக்கம் ‘பேச’ தொடங்கி விட்டதை அந்த சஞ்சிகை சுட்டிக் காட்டியது. அப்போது தொடக்கம் நாடு இன்னும் தேர்தல் சூழலில் இருந்து வருகிறது.

நஜிப் இன்னும் செல்வாக்குடன் -64 விழுக்காடு- இருப்பதாக மெர்தேக்கா மய்யக் கருத்துக் கணிப்புக்கள் காட்டிய போதிலும் பிஎன் செல்வாக்கு இன்னும் குறைவாகவே இருக்க வேண்டும் என எக்கானாமிஸ்ட் குறிப்பிட்டது.

நஜிப்புக்கு ‘தேர்வுகள்’ வெகு வேகமாக குறைகின்றன

அம்னோ பைகள் ஆழமாக இருப்பதாலும் தேர்தல் தொகுதி எல்லைகளில் அது தில்லுமுல்லு செய்வதாலும் சாதாரணப் பெரும்பான்மையை வெற்றி கொள்வது நஜிப்புக்கு எளிதாக இருக்கும் என அந்த சஞ்சிகை கருதுகிறது.

ஆனால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை மீண்டும் பெறுவதற்கு நஜிப் ‘உண்மையிலேயே கடுமையாக’ போராட வேண்டியிருக்கும். அதில் அவர் தோல்வி கண்டால் கட்சிக்குள் புரட்சியை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

“ஆகவே நஜிப்புக்கு ‘தேர்வுகள்’ வெகு வேகமாக குறைகின்றன. அவர் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் தேர்தலை அவசியம் நடத்தியாக வேண்டும்..

“இதனிடையே நிலை தடுமாறுகின்றவர் என்ற பெயரையும் அவர் ஏற்படுத்திக் கொண்டு விட்டார். நாட்டின் இரண்டாவது பிரதமரான தமது தந்தைக்குப் பின்னர் தேர்வு செய்யப்படாமல் நீண்ட காலத்துக்கு பணியாற்றும் பிரதமர் என்ற வருத்தத்தை தரும் அவப்பெயரும் அவருக்குச் சேர்ந்து விட்டது,” என அந்த சஞ்சிகை மேலும் குறிப்பிட்டது.

தேர்தலுக்கு மலேசியா நீண்ட காலமாக தயாராகி வருவதால் “தேசிய அரசியலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்” கட்சி சார்பு நிலை உருவாகியுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக இருப்பதாகக் கருதப்படும் அமைப்புக்களை (எடுத்துக்காட்டுக்கு பெர்சே என்ற தேர்தல் சீர்திருத்தப் போராட்ட இயக்கம், சுயேச்சையான செய்தி இணையத்தளமான மலேசியாகினி)  அம்னோவும் அதற்கு நட்புறவான ஊடகங்களும் தாக்கி செய்திகளைப் போடுகின்றன.
 
“அத்தகைய அமைப்புக்கள் யூதவாதிகள், அமெரிக்கா அல்லது அந்நிய நிதியாளரான ஜார் சோரோஸ் ஆகிய தரப்புக்களின் நன்கொடைப் பட்டியலில் இருப்பதாக பொய்க் கதைகள் ஜோடிக்கப்படுகின்றன.’

“அத்தகைய அவதூறுகள் மலேசிய வாக்காளர்களைக் குறிப்பாக அதன் முஸ்லிம்களை இன்னும் கவருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவை விரக்தியின் வெளிப்பாடுகள் என்பது மட்டும் நிச்சயம்,” என எக்கானாமிஸ்ட் கூறியது.

 

TAGS: