மக்கள் பணத்தில் மந்திரி புசார் மகனுக்கு சாதனைத் திருமணம் செய்தால் பொறாமையா?

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், அக்டோபர் 6, 2012.

கடந்த வாரம் மலாக்காவில் மகனுக்கு சாதனைத் திருமணம் செய்த மலாக்கா முதல் அமைச்சரின் விவகாரம் தனிப்பட்ட ஒருவரின் சொந்த விவகாரமாக இருந்தால், அது பக்காத்தானுக்கோ கெஅடிலானுக்கோ கவலையில்லை.

ஆனால், அது மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்டதாகப் புகார் கிடைத்துள்ளதாலும், ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர் என்ற ரீதியில் பல நிறுவனங்கள் வியாபார யுக்தியுடன் முன்வந்து வழங்கும் உதவிகளும், நிதியும் கூடத் தவறான நோக்கங்களுடன்  வழங்கப்படலாம்  என்பதால் இன்று அது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிலாங்கூரின்  முன்னால் மந்திரி புசார் கிர் தோயோவின் வீடு விவகாரம் கூட அவரின் தனிப்பட்ட விவகாரம்தான், ஆனால் அவர் பதவியில் இருக்கும் போது வாங்கிய அந்த வீடு எவ்வகையில், என்ன விலைக்கு, வாங்கப் பட்டது? அதற்கு, அவர் அரசாங்கத்தில் வகித்த பதவி எப்படிப் பயன்படுத்தப் பட்டது என்ற அடிப்படையிலேயே விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அதே போல் இத்திருமணமும் அமைந்து விடடதோ என்பதே மக்களின் கேள்வி!

இத்திருமணம் சம்பந்தமாக  மலாக்கா மாநில மேம்பாட்டு கழகம் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? மேலும், சாதனைத் திருமணத்தில் அரசாங்கப் பணியாளர்களும்,  அரசாங்க இலாகாகளும் ஈடுப்படுத்த பட்டதா, இல்லையா? அவற்றின் ஈடுப்பாட்டால் பொது நிதி அல்லது அதிகார அத்துமீறல் நடந்துள்ளதா என்பதும் மக்களின் கேள்வி.

இது போன்ற அதிகார அத்துமீறல்கள் மீது வெறுப்பு கொள்ளும் அரசாங்க அதிகாரிகளும், பொது மக்களும் நேரடியாக மாநில அரசு மீது புகார் கொடுக்க முடியாமல், அவர்களின் புகார்களை பக்காத்தான் வழி செய்துள்ளனர். ஆக, அவர்களின் புகாருக்குச் சரியான பதிலை அலி ரூஸ்தாம் வழங்க வேண்டுமே தவிர, விவகாரத்தைத் திசை திருப்பக்கூடாது.

எதிர்க்கட்சிகளை வசைமாரிப் பொழிய இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தக் கூடாது. எதிர்க்கட்சி தலைவர்களின் குடும்ப திருமணங்களில் அப்படிப்பட்ட அரசாங்க அல்லது தனியார்துறை அனுகூலங்களைப் பெறும் அல்லது பயன் படுத்தும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் எவரும் அதனைக் கண்டு கொள்வதில்லை. மேலும் மலாக்கா முதல் அமைச்சரே முன்வந்து இத்திருமணத்திற்கு ரிம6 இலட்சம் செலவிடப்பட்டதாக அறிவித்துள்ளதால், ஒரு பொது ஊழியருக்கு இவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து வந்தது என்ற கேள்வியும் எழும்புவது  இயற்கையே.  

சாமானிய மக்களோ திருமணத்தின் போது அடிப்படை உணவுக்கு ஒரு விருந்தினருக்கு தலா வெள்ளி 8 முதல் 10 வரை செலவிடும் பொழுது முதல் அமைச்சரின்  குடும்ப திருமணத்தில் பல தடபுடல்கள் இருந்தனவாம். அதற்கான செலவும் பல மடங்கு அதிகமாகத்தானே இருக்க வேண்டும். ஆக, வருகை தந்த 130 ஆயிரம் விருந்தினருக்கான விருந்துபசரிப்புக்கே செலவு வெள்ளி 20 முதல் 30 இலட்சங்களுக்கு மேற்போகும் என்று மக்கள் கருதுவதில் என்ன தப்பு? 

ஆனால், அலி ரூஸ்தாம் வழங்கியுள்ள விருந்தினரின் எண்ணிக்கையுடன், அவர் வழங்கியுள்ள திருமணச் செலவுகளை ஒப்பிட்டால் எங்கோ உதைப்பது சாதாரண மக்களுக்கே தெரியும். இருப்பினும், முதல் அமைச்சருக்கு புரியாததுதான் புதிராக இருக்கிறது.

 

TAGS: