பிரதமர் மீது “நம்பிக்கை” வைத்து, நட்டாற்றில் நிற்கின்றனர் புக்கிட் ஜாலில் தோட்ட மக்கள்

-கி.தமிழ்செல்வம், சிலாங்கூர் ஹிண்ட்ராப் ஒருங்கிணைப்பாளர். அக்டோபர் 6, 2012.

1800 ஏக்கர் பரப்பளவை கொண்ட புக்கிட் ஜாலில் ரப்பர் தோட்டம் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டு இன்று  26 ஏக்கராக மெலிந்து கிடக்கிறது.வாடாமல்லி தோட்டம் என்பது இத்தோட்டத்தின் இயற்பெயர்.இதிலிருந்தே தெரிகிறது ரப்பர் கன்றுகளை  ஊன்றிய காலத்திலிருந்தே  இத்தோட்ட நிலத்தில் வியர்வை துளிகளை நம்  முன்னோர்கள் சிந்தியிருக்கிறார்கள் என்பது.

ரப்பரின் விலை உச்சத்தில் இருந்த வரை இங்குள்ள இந்திய தொழிலாளர்கள் கசக்கப் பட்டிருக்கிறார்கள். ரப்பரின் விலை வீழ்ச்சி அடைந்ததும் இலட்சகானக்கான இந்திய தோட்ட பாட்டாளிகளுக்கு நிகழ்ந்த கொடுமைதான் புக்கிட் ஜாலில் தோட்ட பாட்டாளிகளுக்கும் நடந்தது. இனி நீங்கள் தேவையில்லை தோட்டத்தை விட்டு வெளியேறுங்கள் என்று நா கூசாமல் சொல்கிறார்கள்.

இதில் வித்தியாசம்  என்னவென்றால், இவர்களை வெளியேற சொல்வது ஏதோ தனியார் முதலாளிகள் அல்ல, மாறாக  இந்நாட்டை ஆளும் பாரிசான் அரசாங்கம்.

ஐந்து, ஆறு தலைமுறைகளாக, வாழையடி வாழையாக நாங்கள் இங்கே வாழ்கிறோம்.எங்கள் பாட்டனும் பூட்டனும் கால் பதித்த நிலம் இது. அவர்கள் வாழ்ந்த சூழலில் எங்கள் எதிர்கால சந்ததியினர் வாழ எங்களுக்கு வெறும் நான்கு ஏக்கர் நிலத்தை தாருங்கள் என்று மன்றாடிக் கொண்டிருகிறார்கள் இத்தோட்ட மக்கள்.

சந்தா வாங்கியவர்கள் கைவிட்டு விட்டார்கள், ஓட்டு வாங்கியவர்கள் கை விரித்து விட்டார்கள், மந்திரிகள் மறந்து விட்டார்கள், ஆளும் கட்சிக் காரர்கள் கழண்டு கொண்டார்கள்! பணபலம், அரசியல் பலம், அதிகார பலம் என்று எந்த உதவியும் இல்லாமல் நிராயுதபாணிகளாகத் தங்களின் உரிமைக்காக மனம் சோராமல் போராடினார்கள். 

அந்த போராட்டத்தின் முக்கிய திருப்பமாக அமைந்ததுதான் “என் மீது நம்பிக்கை வையுங்கள் கைவிடமாட்டேன்” என்று நாடு முழுதும் பிரச்சாரம் செய்யும் பிரதமர் நஜிப் அவர்களிடம் நேரிடையாக நியாயம் கோரிய   இத்தோட்ட மக்களின் புத்திரா ஜெயா  முற்றுகை போராட்டம். அந்த முற்றுகை போராட்டத்தின் போது பிரதமரும் தோட்ட மக்களின் பிரச்சனையை நேரிடையாக சந்தித்து பிரச்சனையை அறிந்து கொள்ள சம்மதம் தெரிவித்து மக்களை சந்திக்கும் ஒப்புதல்  கடிதத்தை வழங்கியது பிரதமர் அலுவலகம்.  ஆகா, பிரதமர் நமக்கு சுமூகமான முடிவை நிச்சயம் வழங்குவார் என்ற “நம்பிக்கையில்” அந்த கடிதத்தை தங்கள் தோட்ட ஆலயத்தின்  மாரியம்மன் காலடியில் வைத்து இருகரம் கூப்பிய நிகழ்வு காண்பவரின் மனதைக் கசிய செய்தது.

புக்கிட் ஜாலில் தோட்ட மக்களின் பிரச்னைக்கு பிரதமர் தீர்வு கண்டு விட்டார். அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் பிரதமர் அலுவலகத்துக்கு வாருங்கள் என்ற செய்தி கேட்டு பெரும் எதிர்பார்ப்போடு சென்றனர் பிரதமரை “நம்பிய” தோட்ட பாட்டாளிகளும் அவர்களின் சந்ததியினரும். “உங்களுக்கு நான்கு ஏக்கர் நிலமெல்லாம் கிடையாது, பக்கத்தில் இருக்கும் புறா கூண்டு போன்ற அடுக்குமாடி வீட்டிற்கு குடியேறுங்கள்” என்று   இத்தனை நாள் பாடிய அதே பல்லவியை பாடி பாட்டாளிகளை திருப்பி அனுப்பிவிட்டார் பிரதமரின் சிறப்பு அதிகாரி.

கோடி கோடியாய் வரவு செலவு திட்டம். ஆயிரமாயிரம் ஹெக்டர் நில ஒதுக்கீடுகள். ஆனால் நியாமான நான்கு ஏக்கர் நிலத்தை இந்த உழைக்கும் வர்க்கத்திற்கு வழங்க பிரதமருக்கு மனமில்லை.இந்த 26 ஏக்கர் நிலம்  இஸ்லாமிய இடுகாட்டிற்கு எடுத்துக்கொள்ளப் படுமாம் ஆனால் உயிர் வாழ 41 குடும்பங்களுக்கு நான்கு ஏக்கர் இல்லையாம்.

பிரதமரை “நம்பினால்” பிணத்துக்கு கொடுக்கும் மரியாதை கூட இந்தியர்களுக்கு கிடைக்காது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் பிரதமர்.  

பிரதமரின் இந்த மெத்தனப் போக்கை ஹிண்ட்ராப் இயக்கம் கடுமையாக கண்டிக்கிறது. 1973 ஆம் ஆண்டு முதல் இத்தோட்ட மக்கள் தங்களின் குடியமர்வு தீர்வுக்காக பாரிசான் அரசிடம் நெடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டரசு பிரதேசம் இந்நாட்டு வரைப்படத்தில் தோன்றுவதற்கு முன் தொடங்கிய இவர்களின் அடிப்படை சட்ட மற்றும் மனித உரிமை போராட்டம் வெற்றியடைய   பிரதமர்   இந்த  மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு   உண்மையிலேயே உளப்பூர்வமாக எண்ணம் கொண்டிருகிறார என்பதுதான் கேள்வி.  மனமிருந்தால்  இப்பிரச்சனைக்கு நொடிப்பொழுதில் அவரால் தீர்வு காண முடியும்.

இதுவரை 8 லட்சம் தோட்டப் பாட்டாளிகள் இப்படி அநியாயமாக வெளியேற்றப்  பட்டிருகிறார்கள்.இனியும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது. புக்கிட் ஜாலில் தோட்ட மக்களின் உரிமை போராட்டத்திற்கு சிலாங்கூர் ஹிண்ட்ராப் இயக்கம் பக்க பலமாய் நிற்கும்.

எதிர்வரும் அக்டோபர் 10 ஆம் தேதி, காலை 9.00  மணிக்கு ,புக்கிட் ஜாலில் தோட்ட மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிக்காட்டவும்,  தங்களின் கோரிக்கையை பிரதமருக்கு மீண்டும் வலியுறுத்தும் குறிப்பாணையை  அவரிடம் வழங்கவும் புத்திரா ஜெயா செல்கிறார்கள். பொதுமக்களும், சமூக அமைப்புகளும் அந்நிகழ்வில் திரண்டு தங்களின் ஆதரவை வெளிப்படுத்துமாறு கேட்டுகொள்கிறோம்.