டாக்டர் மகாதீர்: எதிர்க்கட்சிகளுக்கு போடப்படும் வாக்கு சோரோஸுக்கு செலுத்தப்படும் வாக்கு

எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிப்பது, மலேசியாவை காலனியாக்குவதற்கு செல்வந்தர் ஜார்ஜ் சோரோஸ் மேற்கொள்வதாகக் கூறப்படும் முயற்சிக்கு வாக்களிப்பதாகும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பிரகடனம் செய்துள்ளார்.

இன்றைய நியூ சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான கட்டுரை  ஒன்றில் மகாதீர், கடந்த காலத்தில் ஹங்கேரி, உக்ரெய்ன், ஜார்ஜியா ஆகிய நாடுகளில் சோரோஸ் அதனைச் செய்வதற்கு முயற்சி செய்ததற்கான பல ஆதாரங்களையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

உலகளாவிய மூலதனத்தைக் கொண்டு ‘காலனியாக்குவதற்கு’ வழி வகுக்கும் பொருட்டு ‘சிவில் சமூகத்தை’  வலுப்படுத்துவதற்கு அரசு சாரா அமைப்புக்களுக்கு சோரோஸ் நிதி அளித்தார் என்பது மகாதீர் மேற்கோள் காட்டியுள்ள ஆதாரங்களின் அடிப்படைக் கருப் பொருளாகும்.

“அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்தில் இருந்த போது ‘சிவில் சமூகம்’ பற்றி அவர் அக்கறை காட்டிருந்தது சிலருக்கு நினைவிருக்கலாம். அவர் இன்னும் சிவில் சமூகம் பற்றியே பேசுகிறார்.”

“சோரோஸ், அன்வார் ஆகிய இருவருக்கும் ஒரே மாதிரியான சிந்தனைகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்,” என மகாதீர் எழுதியுள்ளார்.

மகாதீரைப் பொறுத்த அவரியில் அத்தகையை பிரதிநிதிகளில் ஒன்று மலேசியாகினி ஆகும். ‘தம்மைப் போன்ற மக்களை’ அதிகாரத்தில் வைக்கும் சோரோஸுடைய ‘தீய நோக்கத்தை’ சாதிப்பதற்கு அரசு சாரா அமைப்பு என்னும் முறையில் அது முயலுகிறது என மகாதீர் எண்ணுகிறார்.

“தமது நோக்கத்தை அடையும் பொருட்டு பயன்படுத்திக் கொள்வதற்கு மலேசியாகினியை அரசு சாரா அமைப்பாக அவர் (சோரோஸ்) கருதுகிறார்.

“அத்துடன் தங்கள் நலனுக்காக மலேசியாவின் எதிர்க்கட்சிகளை பயன்படுத்திக் கொள்ளும் மற்ற அந்நிய அரசு சாரா அமைப்புக்களும் அரசாங்கங்களும் உள்ளன.”

“ஆகவே எதிர்க்கட்சிகளுக்கு போடப்படும் வாக்கு போக்கிரி நாணய வணிகரான சோரோஸுக்கு போடப்படும் வாக்கு,” என அவர் எழுதியுள்ளார்.

சோரோஸ் ஏன் கோலாலம்பூருக்கு அழைக்கப்பட்டார்

மகாதீரும் சோரோஸும் இணக்கமான உறவுகளை கொண்டுள்ளதைக் காட்டும் சோரோஸுடனான அவரது கடிதத் தொடர்புகள் மீது மலேசியாகினி வெளியிட்ட கட்டுரைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அவரது கட்டுரை அமைந்துள்ளது

மலேசியாகினி கட்டுரைகள் சோரோஸிடமிருந்து நிதிகளை பெற்றதை ‘சட்டப்பூர்வமாக்குவதற்கான’ முயற்சி என மகாதீர் சொன்னார். முன்பு அறிவிக்கப்பட்டது போல தாமும் சோரோஸும் வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ளவில்லை என்றார் அவர்.

“நான் வெளிநாட்டில் இருந்த போது போரை ஒரு குற்றமாக்குவதற்கான பிரச்சாரத்தில் என்னுடன் இணைந்து கொள்ளுமாறு நான் அவரை அழைத்ததாகக் கூறி சோரோஸிடமிருந்து தான் பணம் பெற்றதை சட்டப்பூர்வமாக்க மலேசியாகினி முயன்றது.”

“சோரோஸிடமிருந்து பணத்தைப் பெறுவதும் போரைக் குற்றமாக்குவதற்கான அழைப்பும் இரண்டு வெவ்வேறான விஷயங்கள். எந்த வழியிலும் ஒன்றையொன்று நியாயப்படுத்த முடியாது,” என்றார் மகாதீர்.

(மலேசியாகினி சோரோஸின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பிய போதிலும் மகாதீர் தமக்கு அடுத்து பொறுப்பேற்ற அப்துல்லா அகமட் படாவியுடன் கொண்டிருந்த தகராறு உச்சக் கட்டத்தில் இருந்த  போது அந்த செய்தி இணையத்தளத்துக்கு பல பேட்டிகளை அளித்துள்ளார்)

தாம் நாணய வாணிகத்தை குறை சொல்வதில் தவறு இல்லை என சோரோஸ் ஒப்புக் கொண்ட பின்னரே சோரோஸுடன் தாம் கடிதத் தொடர்பு கொண்டதாக மகாதீர் விளக்கினார்.

‘வேறுபாடுகள் பேசப்படவில்லை’

“ஜார்ஜ் டபிள்யூ புஷ் இரண்டாவது தவணைக்கு வெற்றி பெறுவதை தடுப்பதற்கான இயக்கத்துக்கு சோரோஸ் நிதி உதவி செய்வதாக அறிந்த பின்னரே அந்தப் பிரச்சாரத்தில் சேர்ந்து கொள்ளுமாறு நான் அவரை அழைத்தேன்.”

“சோரோஸ் போரை விரும்பவில்லை என்பதால் அவர் புஷ்-ஷை எதிர்ப்பதாக நான் எண்ணினேன்.”

“ஆனால் போரைக் குற்றமாக்குவதற்கு உழைக்குமாறு கேட்டுக் கொள்ளும் என் அழைப்புக்குப் பதில் அளித்த சோரோஸ், மக்கள் 7,000 ஆண்டுகளாக மக்கள் சண்டையிட்டுக் கொண்டு வருகின்றனர். அதனால் பூசல்களைத் தீர்ப்பதற்கு போர் ஒரு வழியாகும் எனத் தெரிவித்தார்.”

“அவரது பதில் எதிராக இருந்தது என மலேசியாகினி சொன்னது சரியே. நான் வியப்படையவில்லை. போரில் மக்கள் கொல்லப்படுவதை அவர் எதிர்க்கவில்லை,” என்றார் மகாதீர்.

இறுதியில் சோரோஸை தாம் சந்தித்ததாகவும் தங்களுக்கு இடையில் இணக்கம் இல்லை என்பதை இருவரும் ஒப்புக் கொண்டதாகவும் அவர் சொன்னார்.

“நாணய வாணிகம் சரியானது பொருத்தமானது என அவர் இன்னும் கருதுகிறார். நாங்கள் வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ளவில்லை. நான் மலேசியன் என்ற முறையில் நாகரீகமாக நடந்து கொண்டேன். ஆகவே வேறுபாடுகள் தீர்த்துக் கொள்ளப்பட்டன என்ற விஷயமே எழவில்லை.”

சோரோஸ் மலேசியாகினியின் ஆசிரியர் பகுதிக் கொள்கையில் செல்வாக்கைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுவதை அந்த செய்தி இணையத் தளம் திரும்பத் திரும்ப மறுத்து வந்துள்ளது. சோரோஸின் திறந்த சமூகக் கழகத்திடமிருந்து ( Open Society Institute ) மானியம் பெற்றது மட்டுமே அவருடன் மலேசியாகினிக்கு உள்ள ஒரே தொடர்பாகும்.