அம்பிகா: மோசடிகளை முறியடிக்க அனைவரும் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும்

தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் அமைப்பான பெர்சேயின் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், 1999ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது புதிதாக வாக்காளர்களாக பதிந்துகொண்ட 650,000 வாக்காளர்களால் வாக்களிக்க முடியாமல் போனதை நேற்று நினைவுபடுத்தினார்.

கணினி பதிவுமுறை அமலுக்கு வருமுன்னர், வாக்காளராகப் பதிந்துகொண்டவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

ஆனால், வாக்காளர்பதிவு கணினிமயம் ஆன பின்னர், காத்திருப்புக் காலம் மூன்று மாதங்களாகக் குறைந்தது. எனவேதான் நேற்று அலிரான் ஏற்பாடு செய்திருந்த ஒரு பொதுக் கருத்தரங்கில் பேசிய அம்பிகா, வாக்காளர்களாக உள்ளவர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வெண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன் இன்னும் வாக்காளர்களாக பதிவு செய்யாதிருப்போரிடையே வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் ஆகக் கடைசி புள்ளிவிவரங்கள் மலேசியாவின் வாக்காளர் எண்ணிக்கை 2012 ஜூன் 30 முடிய 13.1 மில்லியன் என்று காட்டுவதாக அம்பிகா கூறினார்.

“மேலும் மூன்று மில்லியன் பேர் வாக்களிக்கும் தகுதியுடன் இருக்கிறார்கள்.  ஆனால், அவர்கள் வாக்காளர்களாகப் பதிந்துகொள்ளவில்லை.

“அவர்கள் இப்பவும் பதிவு செய்துகொள்ளலாம். இப்போது பதிவு செய்தால் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் நடக்குமானால் வாக்களிக்கும் தகுதி பெறுவர்”, என்றார்.

அக்கறையுள்ள மலேசியர்கள் இன்னமும் வாக்காளர் ஆகாமல் இருக்கும் மலேசியர்களை வாக்காளர்களாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.

1999 மே-இல் 650,000 பேர், புகழ்பெற்ற பொருளாதார பேராசிரியர் ஜோமோ குவாமே சுந்தரம் (வலம்) போன்றவர்கள் உட்பட, வாக்காளர்களாக பதிந்துகொள்ள விரைந்தனர்.

அப்போது பிரதமராக இருந்த டாக்டர் மகாதிர் முகம்மட் துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிமை பதவிநீக்கம் செய்ததால் ஆத்திரமடைந்த பலர் வாக்காளர்களாக பதிந்துகொள்ள விரைந்தனர்.

வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களிப்பது முக்கியம்

ஆனால், மகாதிர் 1999 நவம்பர் மாதமே 10வது பொதுத் தேர்தலை வைத்து விட்டார்.

அத்தேர்தல் ஒரு மாதம் பிந்தி வைக்கப்பட்டிருந்தால் முடிவு எப்படி இருந்திருக்கும் என்பது தெரியவில்லை. ஏனென்றால், அதில்   அவசரம்அவசரமாக அமைக்கப்பட்ட பிகேஆர், பாஸ், டிஏபி ஆகியவை அடங்கிய மாற்றுக்கூட்டணி பெற்ற வாக்குகளைவிட பிஎன் பெற்ற வாக்குகள் 650,000-க்கும் அதிகமில்லை.

வாக்காளர் பட்டியலில் பல குறைபாடுகள் இருப்பதை பெர்சே சுட்டிக்காட்டினாலும் இசி அதைக் கவனிப்பதில்லை என்று கூறிய அம்பிகா, ஆனாலும் பெர்சே தேர்தல் சீரமைப்புக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் என்றார்.

அதேவேளையில்,  பெர்சே ஏற்பாடு செய்திருந்த பேரணிகளில் பெருந் திரளாக  கலந்துகொண்ட மலேசியர்கள், இன்னமும் வாக்காளர்களாக பதிந்துகொள்ளாதிருக்கும் மூன்று மில்லியன் பேரை வாக்காளர்களாக பதிந்துகொள்ள உதவ வேண்டும்.  வாக்காளர்களான அவர்களை வாக்களிப்பு நாளன்று வாக்களிக்கவும் அழைத்து வர வேண்டும்.

மக்களை வாக்காளராக்குவதும் அவர்களை வாக்களிக்கச் செய்வதும் தேர்தல் “மோசடிகளைக் குறைக்க” உதவும் என்று அம்பிகா கூறினார்,

TAGS: