டிஏபி சின்னத்துடன் ‘ஹுடுட் வேண்டாம்’ எனக் கூறும் சுவரொட்டிகள் செலாயாங் வட்டாரத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி கூறிக் கொண்டுள்ளது.
பள்ளிவாசல்களிலும் சூராவ் அறிவிப்புப் பலகைகளிலும் அவை ஒட்டப்பட்டுள்ளதாக சிலாங்கூர் டிஏபி குழு உறுப்பினர் எரிக் தான் கூறினார்.
“தவறான புரிந்துணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க அந்த சுவரொட்டிகளை அகற்றுமாறு டிஏபி உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது,” என அவர் சொன்னார். சனிக்கிழமை அவர் நேரடியாக அந்த சுவரொட்டிகளை கண்டு பிடித்தார்.
ஏ4 அளவு வெள்ளைத் தாளில் டிஏபி சின்னம் வர்ணத்திலும் ஹுடுட் வேண்டாம் என்பது எழுத்திலும் அச்சிடப்பட்டுள்ளன.
அந்த சுவரொட்டிகள் செலாயாங் Surau Malabar Hidayul Islam, தாமான் மெலாத்தி மசீச அலுவலகம் ஆகியவற்றிலும் மேலும் சில இடங்களிலும் காணப்பட்டன.
பொது மக்கள் அந்த சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் என்றும் அவசியமானால் அது பற்றி செலாயாங் நகராட்சி மன்றத்திடமும் போலீசிலும் புகார் செய்ய வேண்டும் என செலாயாங் நகராட்சி மன்ற உறுப்பினருமான தான் அறிவுரை கூறினார்.
ஹுடுட் விவகாரம் மீது டிஏபி, பாஸ் கட்சிகளின் நிலை குறித்து அம்னோவும் மசீச-வும் கேள்வி எழுப்பியுள்ளதால் அதன் மீது சர்ச்சை உருவாகியுள்ளது.
அந்த நடவடிக்கைகளுக்கு பிஎன் பின்னணியில் இருக்க வேண்டும் என தாம் சந்தேகிப்பதாக தான் சொன்னார். பிரச்னையை தூண்டி விட்டு பாஸ் கட்சிக்கும் டிஏபி-க்கும் இடையில் நிலவும் நல்ல உறவுகளைச் சீர்குலைப்பதே அதன் நோக்கம் என அவர் கூறிக் கொண்டார்.
“டிஏபி இதனைச் செய்வதற்குக் காரணமே இல்லை. அதிலிருந்து எங்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை.”
அந்தச் சுவரொட்டிகளை மசீச ஒட்டியிருக்கலாமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த தான், அது சாத்தியம் என்றார். ஏனெனில் செலாயாங் வழக்கமாக மசீச போட்டியிடும் தொகுதியாகும் என்றார் அவர்.
உண்மையில் அதற்கு திட்டமிட்டவர் ‘இனப் பதற்றத்தை உருவாக்க விரும்பியிருக்கலாம்’ என டிஏபி சிகாம்புட் கிளை துணைத் தலைவர் ஏ முருகேசு கூறினார்.
தாம் இன்று பிற்பகல் போலீசில் புகார் செய்யப் போவதாக சிலாங்கூர் டிஏபி அமைப்புச் செயலாளர் லிம் சொங் ஹாவ் தெரிவித்தார்.