எதிர்க்கட்சிகளுக்கு போடப்படும் வாக்கு செல்வந்தரும் முன்னாள் நாணய ஊக வணிகருமான ஜார்ஜ் சோரோசுக்கு அளிக்கப்படும் வாக்கு என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிக் கொண்டுள்ளதை பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் நிராகரித்துள்ளனர்.
“அந்த முன்னாள் பிரதமர் நமது அரசியலுக்கு இப்போது பொருத்தமில்லாதவர் என்பதால் நான் அவரைச் சம்பந்தப்படுத்த விரும்பவில்லை. என்றாலும் அவை முதுமையால் தளர்ச்சி அடைந்துள்ள ஒருவருடைய சொற்கள் ஆகும்,” பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
“ஜார்ஜ் சோரோஸுடன் எங்களுக்கு எந்த உறவும் இல்லை. ஜார்ஜ் சோரோஸ் பற்றி எங்களுக்கு ஏதும் தெரியாது.”
பக்காத்தானுக்கு யூத திட்டம் ஏதுமில்லை. அரசாங்கத்தைப் போன்று அதுவும் பாலஸ்தீனப் போராட்டத்தை ஆதரிக்கிறது. அதனை இஸ்ரேல் ஒடுக்குவதையும் எதிர்க்கிறது என்றும் அவர் சொன்னார்.
எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிப்பது, மலேசியாவை காலனியாக்குவதற்கு செல்வந்தர் ஜார்ஜ் சோரோஸ் மேற்கொள்வதாகக் கூறப்படும் முயற்சிக்கு வாக்களிப்பதாகும் என டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கூறியிருந்தார்.
நேற்று நியூ சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான கட்டுரை ஒன்றில் மகாதீர் அவ்வாறு எழுதியுள்ளார்.
அந்த விவகாரத்தில் மகாதீர் இரட்டை வேடம் போடுவதாகவும் புவா சாடினார்.
“சோரோஸை மகாதீர் சந்தித்த போது அவருடன் கை குலுக்கி போர்க் குற்றங்களை முறியடிப்பதற்கு தமது அமைப்புக்கு (பெர்டானா உலகளாவிய அமைதி அற நிறுவனம்) ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.”
“அவர் சோரோஸிடம் உதவியை நாடும் போது எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் மக்கள் பக்காத்தானுக்கு வாக்களித்தால் அது ‘சோரோசுக்கு அளிக்கும் வாக்கு’- இது என்ன நியாயம் ?”
மகாதீர் தமது கட்டுரையில் சோரோஸைச் சந்தித்ததையும் நியாயப்படுத்தியுள்ளார்.
“போரைக் குற்றமாக்கும் இயக்கத்தில் சேருமாறு நான் சோரோஸை அழைத்த போது நான் மலேசிய அரசியல் பற்றிப் பேசவில்லை,” என அவர் எழுதியுள்ளார்.
“நிச்சயமாக அவர் பணம் கொடுக்குமாறு நான் கேட்கவும் இல்லை. அவரும் பெர்டானா உலகளாவிய அமைதி அற நிறுவனத்துக்கு பணம் கொடுக்கவும் இல்லை. போரை ஒரு குற்றமாக்கும் இயக்கம் மலேசியாவுக்கு மட்டுமின்றி மனுக்குலம் அனைத்துக்கும் நன்மையானது.”
திட்டம் ஏதுமில்லை
மகாதீர் குற்றம் சாட்டுவதற்கு ‘எந்த ஆதாரமும் இல்லை’ என குபாங் கெரியான் எம்பி-யும் பாஸ் உதவித் தலைவருமான சலாஹுடின் அயூப்-பும் நிராகரித்தார்.
“நாட்டுக்கு துரோகம் செய்யும் எண்ணம் பக்காத்தான் தலைவர்களுக்கு கிஞ்சித்தும் கிடையாது. நாங்கள் நாட்டைக் காப்பாற்ற விரும்புகிறோம் என்பதே அடிப்படை விஷயமாகும். அந்நிய நிதிகளைப் பெறுவது எங்கள் திட்டத்தில் இல்லை.”
“மகாதீர் இப்போது தமது சொந்த நிழலைக் கண்டு கூட அஞ்சுகிறார். அதனால் தான் பக்காத்தானுக்கு போடப்படும் வாக்கு சோரோஸுக்கு செலுத்தப்படும் வாக்கு எனச் சொல்லி மக்களை மருட்டுகிறார்.”