செம்பனை எண்ணெய் ஏற்றுமதிக்கு அங்கீகரிப்பட்ட உரிமங்கள் (ஏபி) கொடுப்பதை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிகேஆர் வலியுறுத்தியுள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் கச்சா செம்பனை எண்ணெய்க்கு (சிபிஓ) வரிவிலக்கு அளிக்க வகை செய்யும் ஏபிகள் தவறாகப் பயன்படுத்தப்படும் சாத்தியம் இருப்பதாக அது கருகிறது.
அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதன் விளைவாகத்தான், விழுந்து கிடக்கும் செம்பனை எண்ணெய் விலைகளைத் தூக்கி நிறுத்த அரசாங்கம் அதிகமான ஏபிகளை வெளியிட்டும்கூட பயனில்லாமல் போய்விட்டது என பிகேஆர் முதலீட்டு, வர்த்தக பிரிவுத் தலைவர் வொங் சென் கூறினார்.
“ஏபிகளில் பெரும்பகுதி சிபிஓ-வை விற்கும் திறன் இல்லாத நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதுதான் இதற்குக் காரணமாகும் ஆமைநடை போட்டுக்கொண்டிருந்த சந்தையில் மேலும் இரண்டு மில்லியன் மெட்ரிக் டன் சிபிஓ-வைக் கொண்டுபோய்க் கொட்டினால் என்னவாகும். குறைவாகவே விற்கப்பட்டது. சில வேளைகளில் விற்பனை செய்யப்படாமலேயே கிடந்தது”,என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் வொங் கூறினார்,.
கச்சா செம்பனை எண்ணெய் உற்பத்தி இவ்வாண்டில் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. இதனால் நாட்டில் எண்ணெய் தேங்கிக் கிடந்து அதன் விளைவாக விலைகளும் சரிந்தன.
சிபிஓ-வுக்கான ஏபிகள் 2,000-த்தில் அறிமுகம் செய்யப்பட்டன. வெளிநாடுகளில் சுத்திகரிப்பு ஆலைகளை வைத்துள்ள மலேசிய நிறுவனங்கள், ஏபிகளை வைத்திருந்தால் 20விழுக்காடு ஏற்றுமதி வரி செலுத்தாமலேயே அவற்றின் ஆலைகளுக்கு சிபிஓ-வை அனுப்பிவைக்கலாம்.
இந்த ஏபிகள் யாருக்குக் கொடுக்கப்படுகின்றன என்பது வெளியில் தெரியாத இரகசியம்.
தகுதியற்ற நிறுவனங்களுக்கு ஏபி-கள் கொடுக்கப்பட்டுள்ளன
பிகேஆர் துணைத் தலைமைச் செயலாளர் டேரல் லெய்கிங் நேற்று வெளியிட்டிருந்த இன்னொரு அறிக்கையில், ஏபி கொடுக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு அந்த நிறுவனத்துக்கு வெளிநாட்டில் சுத்திகரிப்பு ஆலையே கிடையாது என்றார்.
அப்படி இருக்கும்போது எந்த அடிப்படையில் அதற்கு ஏபி கொடுக்கப்பட்டது என அவர் வினவினார்.
மேலும், அந்த நிறுவனத்தில் இந்தோனேசிய நிறுவனம் ஒன்றும் பங்குதாரராய் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“வரி செலுத்தாமல் சிபிஓ ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் ஏபி வெளிநாட்டவர் ஒருவர் இணை உரிமையாளராக இருக்கும் ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது என்ன நியாயம்?.அதனால் மலேசியாவின் வரி செலுத்துவோர் அல்லவா பாதிக்கப்படுகிறார்கள்”.
அந்நிறுவனத்தின் 2009ஆம் ஆண்டு கணக்கறிக்கையின்படி பார்த்தால் அது ரிம20 மில்லியன் ஏற்றுமதி வரி விலக்கைப் பெற்றுள்ளது என டேர்ரல் மதிப்பிட்டார்.