இரண்டு கிறிஸ்துவத் தலைவர்களை மேற்கோள் காட்டி தாம் எழுதிய செய்தி ‘முற்றிலும் பொய்’ என அவர்கள் இருவரும் கூறிக் கொள்வதை உத்துசான் மலேசியா நிருபர் கஸ்தூரி ஜீவாந்திரன் நிராகரித்துள்ளார்.
தேவாலயம் அரசியல் மேடையாக பயன்படுத்தப்படுகிறது என தமது செய்தியில் கூறப்பட்ட அவர்கள் கருத்துக்கள் பொருத்தமில்லாமல் கையாளப்பட்டுள்ளதாக கூறப்படுவதை கஸ்தூரி மறுத்தது உட்பட அவரது கருத்துக்களை அம்னோவுக்குச் சொந்தமான அந்த ஏடு இன்று வெளியிட்டது.
லூதரன் எவாஞ்சில்கல் தேவாலய ஆயர் சாலமன் ராஜா, மலேசியத் தேவாலய மன்ற முன்னாள் தலைவர் தாமஸ் பிலிப்ஸ் ஆகியோரே அந்த இருவரும் ஆவர்.
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அண்மையில் கலந்து கொண்ட கலந்துரையாடல் பற்றிய ‘பொதுவான கருத்துக்களை’ தாம் அவர்களிடமிருந்து கோருவதாக அவர்களிடம் தெரிவித்ததாகக் கஸ்தூரி சொன்னார்.
“நான் என்னை உத்துசான் மலேசியா நிருபர் என அறிமுகம் செய்து கொண்டேன். அந்த விஷயம் மீது சில கருத்துரைகளை நான் விரும்புவதாகவும் அவர்களிடம் தெரிவித்தேன்,” என அவர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்துவர்கள் தாங்கள் ‘ ஏதும் அறியாதவர்கள், புனிதமானவர்கள், தவறான நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் எனக் கருதினாலும் அவர்கள் அமைதியாக இருக்கக் கூடாது என லிம் கேட்டுக் கொண்டுள்ளது மீது பொதுவான கருத்துக்களைப் பெறுவதற்காக நான் முதலில் சாலமனுடன் தொடர்பு கொண்டேன். அவருடைய கருத்துக்களை பெற்ற பின்னர் அவரை மேற்கோள் காட்டலாமா என நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ஒப்புதல் அளித்தார்.”
பிலிப்ஸை பேட்டி கண்ட போதும் தாம் அதே வழி முறையைப் பின்பற்றியதாக கஸ்தூரி சொன்னார். பினாங்கில் கிட்டத்தட்ட 300 தேவாலயத் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது கிறிஸ்துவர்கள் தாங்கள் ‘ ஏதும் அறியாதவர்கள், புனிதமானவர்கள், தவறான நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் எனக் கருதினாலும் அவர்கள் அமைதியாக இருக்கக் கூடாது என லிம் கிறிஸ்துவர்களிடம் கூறியதாக வெள்ளிக்கிழமை மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.
நம்பிக்கை வைத்துள்ளவர்கள் இறைவனுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்றாலும் ‘அனைவருக்கும் நீதி’ (பக்காத்தான் ராக்யாட்டின் அவசர வேண்டுகோள் சுலோகம்) என்பது மீது பேச வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் வலியுறுத்தினார்.
“தேவாலயம் அரசியலுக்கான இடம் அல்ல” என்னும் தலைப்பில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மிங்குவான் மலேசியா செய்தி வெளியிட்டிருந்தது. தேவாலயத்தை அரசியல் மேடையாக பயன்படுத்தியதற்காக சாலமனும் பிலிப்ஸும் லிம்மைச் சாடியதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
நேற்று மலேசிய தேவாலய மன்றத் தலைமைச் செயலாளர் ஹெர்மன் சாஸ்திரியுடன் கூட்டாக நடத்திய நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் அந்த இரண்டு தேவாலயத் தலைவர்களும் மிங்குவான் செய்தியை மறுத்ததுடன் அது ‘முற்றிலும் பொய்’ என வருணித்தனர்.
தங்களது சொற்கள் பொருத்தமில்லாத இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர்கள் அந்தச் செய்தி மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் எனக் கோரியதுடன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
லிம்-மும் அந்தச் செய்தியைக் கடந்த ஞாயிற்றுக் கிழமை கண்டித்துள்ளார்.