நஜிப், ரோஸ்மா ஏன் சாட்சியமளிக்க வேண்டும், அன்வார்

அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில் பிரதிவாதித் தரப்புச் சாட்சிகளாக ஆஜராவதற்கு அனுப்பப்பட்ட சப்பினாவைத் தள்ளி வைக்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸாவும் சமர்பித்த விண்ணப்பங்களுக்கு அன்வார் இப்ராஹிம் பதில் அபிடவிட்-களைத் தாக்கல் செய்துள்ளார்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாண ஆணையர் ஒருவர் முன்னிலையில் இன்று பிற்பகல்  அந்த ஆவணத்தில்  கையெழுத்திட்ட அன்வார், நஜிப்பும் ரோஸ்மாவும் அந்த வழக்கில் உதவி செய்ய வேண்டியிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

சாத்தியமான சாட்சிகளிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் போது நஜிப்பின் முன்னாள் உதவியாளரான கைரில் அன்னாஸ் ஜுசோவை அன்வார் வழக்குரைஞர் பேட்டி கண்ட போது அவர் வழங்கிய தகவலுடன் அது தொடர்புடையதாகும்.

“அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப்பை சந்திக்க குதப்புணர்ச்சி புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை தாம் அழைத்துச் சென்றதை கைரில் அன்னாஸ் உறுதி செய்துள்ளார்.”

“நஜிப்புக்கும் புகார்தாரருக்கும் இடையில் நிகழ்ந்த விவாதத்தில் மேலும் பல விஷயங்கள் பேசப்பட்டிருக்க வேண்டும்”, என அன்வார் தமது அபிடவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

“நஜிப் தொடக்கத்தில், தாம் சைபுலைச் சந்தித்ததை மறுத்துள்ளார். பின்னர் அதனை மீட்டுக் கொண்ட அவர் சைபுல் உபகாரச் சம்பளம் கோரியதாகச் சொன்னார். அதனைத் தொடர்ந்து அது குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ள வழக்குரைஞர்கள் விரும்புகின்றனர்.”

அத்துடன் ஆகஸ்ட் 12ம் தேதி பேட்டியின் போது அன்வார் வழக்குரைஞர்களிடம் வாக்குமூலம் கொடுப்பது தொடர்பில் நஜிப்பும் ரோஸ்மாவும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

சாட்சிகளை அழைப்பதற்குத் தமக்குச் சட்டப்பூர்வ உரிமை இருப்பதாகவும் நஜிப்புக்கு சப்பினாவை அனுப்புமாறு தமது வழக்குரைஞர்களைத் தாம் கேட்டுக் கொண்டதாகவும் அன்வார் சொன்னார்.

ரோஸ்மா சைபுலின் நண்பரைச் சந்தித்துள்ளார்

ரோஸ்மா ஏன் ஆஜராக வேண்டும் என்பது மீது- புகார்தாரரின் நெருங்கிய நண்பரான முகமட் ரஹிமி ஒஸ்மான் – அவரைச் சந்தித்ததாக அன்வார் கூறிக் கொண்டார்.

“2011ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி முன்னாள் தேசிய விளையாட்டாளரான மும்தாஸ் பேகம் அப்துல் ஜபாருடன் எங்கள் வழக்குரைஞர் நடத்திய பேட்டியின் போது அந்தத் தகவல் பெறப்பட்டது. ஆகவே சதித் திட்டம் என்பதை வலியுறுத்துவதற்காக மட்டுமின்றி அந்தச் சந்திப்பு பற்றி விளக்கம் பெறுவதற்குமாகும்.”

“அத்துடம் புலனாய்வு அதிகாரி டிஎஸ்பி ஜுட் பிளேஷியஸ் பெரெரா, குற்றவியல் சட்டத்தின் 112வது பிரிவின் கீழ் ரோஸ்மாவிடமிருந்து வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளார். ரோஸ்மாவுக்கு அந்த விவகாரம் தெரிந்திருக்கிறது என்பதையே அது காட்டுகிறது.”

அந்த அம்சங்கள் அடிப்படையில் சாட்சியமளிப்பதற்கு நஜிப்பும் ரோஸ்மாவும் அழைக்கப்பட வேண்டும் என அன்வார் சொன்னார்.

அன்வாருடைய அபிடவிட் சங்கர நாயர் வழக்குரைஞர் நிறுவனம் வழியாக சமர்பிக்கப்பட்டுள்ளது.

நஜிப்பும் ரோஸ்மாவும் தங்களுக்கு அனுப்பப்பட்ட சப்பினாவை தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்ளும் விண்ணப்பங்களை கடந்த புதன்கிழமை தனித்தனியாக தாக்கல் செய்தனர்.

நாளை அவர்களது விண்ணப்பங்கள் செவிமடுக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அது நாளை நிகழுமா என்பது உறுதியாக இல்லை.

அன்வாருடைய அபிடவிட்டுக்கு நஜிப், ரோஸ்மாவின் வழக்குரைஞர்கள் பதில் அளிக்க வேண்டுமானால் விசாரணை தள்ளி வைக்கப்படலாம்.

நஜிப்பும் ரோஸ்மாவும் தங்கள் விண்ணப்பங்களில் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ள அரசு தரப்பு தலைமை வழக்குரைஞர் சொலிஸிட்டர் ஜெனரல் ll முகமட் யூசோப் ஜைனல் அபிடின், அபிடவிட் பதிலை கொடுக்கப் போவதில்லை.