1990ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அந்நிய செலாவணி வாணிகத்தின் மூலம் ஏற்பட்ட 5.7 பில்லியன் ரிங்கிட் இழப்புக்கு பொறுப்பு எனக் கூறப்பட்ட முன்னாள் பாங்க் நெகாரா துணை ஆளுநர் நோர் முகமட் யாக்கோப்புக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டது மீதான கேள்வியை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தவிர்த்துள்ளார்.
அதற்குப் பதில் அவர் மந்தமான தொனியில் தாம் “nyanyuk (முதுமை மறதி )” என சொன்னார்.
இன்று ஐஜேன் என்ற தேசிய இருதய நோய் சிகிச்சைக் கழகத்தின் 20வது ஆண்டு நிறைவில் கலந்து கொண்ட போது மகாதீரிடம் நிருபர்கள் அந்தக் கேள்வியை எழுப்பினார்கள்.
“எதிர்க்கட்சிகள் எந்த விஷயத்தை வேண்டுமானாலும் கிளப்பலாம். அவர்கள் இப்போது என்னைத் துரத்துவதையும் நீங்கள் காண்கின்றீர்கள். நான் nyanyuk, ஆகவே மக்கள் ஏன் என்னை கேள்வி கேட்க விரும்புகின்றனர்?”
“என்னைப் பாருங்கள். நான் nyanyuk . ஆகவே உங்கள் கேள்விக்கு நான் பதில் அளிக்க முடியாது,” என்றார் அந்த முன்னாள் பிரதமர்.
பக்காத்தான் செல்வந்தரான ஜார்ஜ் சோரோஸுக்குப் பிரதிநிதியாக இருக்கலாம் என மகாதீர் கூறியதை மறுத்த அந்தக் கூட்டணி அவர் ‘முதுமை’ அடைந்து விட்டார் என வருணித்ததற்குப் பதில் அளிக்கும் வகையில் மகாதீர் அவ்வாறு சொல்லியிருக்கலாம்.