“உத்துசான்!, பாராட்டுக்கு நன்றி”

நஜிப் அப்துல் ரசாக்கின் நிர்வாகத்தை வீழ்த்தும் பொருட்டு தமது ஆட்கள் அரசாங்க அமைப்புக்களில் ஊடுருவியிருக்கக் கூடும் என உத்துசான் மலேசியா கூறிக் கொண்டுள்ளதை பிகேஆர் மூத்த தலைவர் வேடிக்கையாக எடுத்துக் கொண்டுள்ளார்.

அந்த நாளேட்டின் கருத்துப் பகுதியில் வெளிவந்த கட்டுரை பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது அது எனக்கு அளிக்கப்பட்டுள்ள பாராட்டு என வேடிக்கையாகச் சொன்னார்.

“உத்துசானுக்கு மிக மிக நன்றி! அவர்கள் அன்றாடம் அன்வாரைத் தாக்குகின்றனர். ஆனால் அதற்கு அன்வார் பதில் அளிப்பதாகவோ அல்லது விளக்குவதாகவோ தெரியவில்லை. அது வேடிக்கையாக இல்லையா?”

“நான் செல்வாக்கைக் காட்டும் அளவுக்கு எவ்வளவு வலிமையானவன் என்பதற்கு அது பாராட்டுதலாகும். அது பிரதமர் அலுவலகம் அல்ல என நான் நம்புகிறேன்”, என அவர் புன்னகையுடன் கூறினார்.

அம்னோவுக்குச் சொந்தமான அந்த மலாய் நாளேட்டில் வரும் கட்டுரைகளை தாம் எப்போதும் கடுமையாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் அன்வார் சொன்னார்.

“நான் உத்துசானை படிப்பதில்லை. உத்துசானுக்கு அது என்ன பெரிய விஷயமா?”

“உள்ளுக்குள் உறைந்துள்ள எதிரிகள்” நஜிப்பின் வெளிநாட்டுப் பயணங்கள், அவரின் தனிப்பட்ட விடுமுறைகள் பற்றிய தகவல்கள் உள்பட அவரைப் பற்றிய இரகசிய தகவல்களை எல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு  தெரிவிக்கின்றனர் என்று அந்த மலாய் ஏடு கூறிக் கொண்டுள்ளது.

ஆனால், சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளை அது பெயர் குறிப்பிடவில்லை.

இன்று அந்த ஏட்டில் Musang berbulu ayam dalam badan-badan strategik kerajaan? (முக்கிய அரசு அமைப்புகளில் பசுந்தோல் போர்த்திய புலிகளா?) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த ஒரு கட்டுரையில், மூத்த செய்தி ஆசிரியர் சைனி ஹசான், இவ்விவகாரத்தில் நம்பத்தகுந்த தகவல் தமக்குக் கிடைத்திருப்பதாகக் கூறினார்.

“எனக்குக் கிடைத்த தகவல் உண்மையான ஆதாரப்பூர்வமான நிலவரத்தைக் காட்டுகிறது,” என்றும் தமது பத்தியான சியுட்டில் (Cuit) அவர் தெரிவித்துள்ளார்.