பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
“இன்றிரவு 10 நிமிடங்களுக்கு குடிநுழைவுத் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டேன். ஆட்டோ-கேட் வழியாக போக முடியவில்லை.இது பெர்சே இயக்கக்குழு உறுப்பினர்களுக்குத் தொல்லைகொடுக்க முனைகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
“என்னைத் தடுத்து நிறுத்தியதற்கு குடிநுழைவு அதிகாரிகளால் சரியான விளக்கம் கொடுக்க முடியவில்லை”,என்று அம்பிகா நேற்றிரவு மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் கூறியிருந்தார்.
நேற்றிரவு ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது அம்பிகா விமான நிலையத்தில் சிறிது நேரம் தடுத்து நிறுத்தப்பட்டார்.
வெளிநாடு செல்ல முயலும் பெர்சே இயக்கக்குழு உறுப்பினர்கள் குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்படுவது இப்போது வழக்கமாக இருக்கிறது. இதுவரை நால்வர் அப்படி தடுத்துநிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஐந்தாமவர் அம்பிகா. இவ்விவகாரத்தை உள்துறை அமைச்சுடன் விவாதிப்பது பற்றி பெர்சே ஆலோசிக்கும் என்றாரவர்.
கடந்த வாரம் பெர்சே இயக்கக்குழு உறுப்பினர் எண்ட்ரு கூ, பெங்கோக் செல்ல முயன்றபோது சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டார்.
மரியா சின் அப்துல்லா, இயோ யாங் போ(இடம்), வொங் சின் ஹுவாட் ஆகியோருக்கும் கடந்த மாதம் இதே அனுபவம் ஏற்பட்டது.
தங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆனாலும் எக்காரணமுமின்றி குடிநுழைவுத் துறை அதிகாரிகள் தங்களுக்குத் தொல்லை கொடுப்பதுதான் புரியவில்லை என்று பெர்சே தலைவர்கள் கூறினர்.