பாஸ் தலைவர்கள்: நஷாவின் கூற்றுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை

பாஸின் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப்பும், மத்திய செயற்குழு உறுப்பினர் காலிட் சமட்டும், கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நஷாருடின் மாட் ஈசாவின் கூற்றுக்கும் பாஸுக்கும்  எவ்வித சம்பந்தமுமில்லை என்றார்கள்.

இன்று செய்தியாளர் கூட்டமொன்றில், டிஏபி கிறிஸ்துவ அரசாங்கத்தை நிறுவ முயல்வதாக நஷாருடின் பேசியிருப்பது பற்றிக் கருத்துரைத்த காலிட், “பாஸுக்கு வெளியில் இருப்போர்” சொல்வதைக் கேட்டு அவர் நடந்துகொள்வதுபோலத் தோன்றுகிறது என்றார்.

“அவரின் செயல்கள், பாஸுக்கு வெளியில் இருப்போரால், அம்னோவைப் போன்றவர்களால் திட்டமிடப்பட்டவைபோலத்தான் தோன்றுகின்றன.

“பாஸில் ஷுரா மன்றம் ஒன்று இருக்கிறது. அது இஸ்லாத்துக்கு எதிரான முயற்சி என்றால் அம்மன்றம் அதற்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கும். நஷாருடின் தெரிவித்தது அவருடைய சொந்தக் கருத்து. அது அந்த மன்றத்தின் கருத்தல்ல”, என்று காலிட்(வலம்) கூறினார்.

அதை ஒரு “மலிவான அரசியல்” என்று வருணித்த காலிட், அது பற்றி மன்றத்திலோ பாஸ் செயற்குழுவிலோ நஷாருடின் பேசியதே இல்லை என்றார்.

இவ்வளவுக்கும் 2011 சரவாக் மாநிலத் தேர்தலுக்குப் பின் நடைபெற்ற நன்றிநவிலும் நிகழ்வில் கிறிஸ்துவ அரசு அமைய பிரார்த்தனை செய்யப்பட்டதாக நஷாருடின் கூறியிருந்தார்.

அது உண்மையாக இருந்தால் ஷுரா மன்றம் முன்பே அதற்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கும் என்றும் காலிட் கூறினார்.

சரவாக் டிஏபி, முன்னதாகவே நஷாருடின் கூறியதை மறுத்தது. அதில் உண்மையில்லை என்றும் அது தீய நோக்கம் கொண்டது, பொறுப்பற்றது என்றும் அது சாடியது.

 

TAGS: