பிரதமர் நஜிப் சோரோஸை நியு யோர்க்கில் சந்தித்தார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அம்னோ விசுவாசிகளால் முதல் நம்பர் எதிரியாகக் கருதப்படும் கோடீஸ்வரரான ஜார்ஜ் சோரோஸை ஈராண்டுகளுக்குமுன் நியு யோர்க்கில் தனிப்பட்ட முறையில் சந்தித்திருக்கிறார்.

இந்தக் கமுக்கமான சந்திப்பு மேன்ஹட்டனில் உள்ள ஆடம்பர தங்குவிடுதியான பிளாசா ஹோட்டலில் நடந்தது. கடந்த வாரம் பெர்காசா தகவல் பிரிவுத் தலைவர் ரஸ்லான் காசிமுடன் நடந்த பொதுவிவாதத்தின்போது சுபாங் எம்பி ஆர்.சிவராசா சொல்லித்த்தான் இது வெளியில் தெரிய வந்துள்ளது.

மலசியாகினி, அந்நிகழ்வு பற்றி நேரடியாக அறிந்த ஒரு வட்டாரத்தை அணுகி  நஜிப்-சோரோஸ் சந்திப்பு உண்மையில் நடந்தது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டது.

மலேசிய என்ஜிஓ-களுக்கு நிதியுதவி செய்து அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்கிறார் என்று குற்றம் சொல்லப்பட்ட சோரோஸைப் பிரதமர் சந்தித்தது 2010, செப்டம்பர் 27-இல்.

இன்னொரு அம்னோ உயர்தலைவரும் அப்போது உடன் இருந்திருக்கிறார்.

2009-இல் பிரதமரான நஜிப், பிரதமர் என்ற முறையில் நியு யோர்க்கில் ஐநாவில் முதல்முறையாக உரையாற்றிய அதே நாளில்தான் சோரோஸையும் சந்தித்தார்.

அவ்வுரையில், உலக அமைதிக்காக மிதவாதிகள் ஒன்றிணைந்து ‘உலகளாவிய இயக்கம்’ தொடங்க வேண்டும் என்ற கருத்தையும் நஜிப் முன்வைத்தார்.

ஐநா பொதுபேரவைக் கூட்டங்களுக்கிடையில் ஐநா தலைமைச் செயலாளர் பான் கி-மூன்-னையும் மற்ற நாட்டுத் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.

நஜிப்பின் ஐநா பயணத்தில் உடன் சென்றோரில் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர், வெளியுறவு அமைச்சர் அனிபா அமான், அமெரிக்காவுக்கான மலேசிய தூதர் ஜமாலுடின் ஜர்ஜிஸ் முதலியோரும் உள்ளிட்டிருந்தனர்.

நாணய ஊக வணிகத்தில் ஈடுபட்டுப் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் சோரோஸ். மலேசியாவில் 1997-98-இல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கு அவரே காரணம் என்று குறைகூறப்பட்டது. அண்மையில், என்ஜிஓ-களுக்கு பண உதவி செய்து பிஎன் அரசைக் கவிழ்க்கப் பார்க்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

சோரோஸ் மீதான தாக்குதல் மலேசியாகினிமீதும் திரும்பியது. மலேசியாகினியில் 29விழுக்காடு பங்குரிமை வைத்துள்ள எடிஎல்எப் நிறுவனம்  வங்கிகளிடமிருந்தும் அரசாங்கங்களிடமிருந்தும் நிதி நிறுவனங்களிடமிருந்தும் முதலீட்டுக்காக நிதியைப் பெறுகிறது. அப்படி அதற்குப் பண உதவி செய்யும் நிறுவனங்களில் ஒன்று சோரோஸ் அறக்கட்டளை. அதை அடிப்படையாக வைத்து மலேசியாகினியும் தாக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை, மலேசியாகினியைத் தாக்குவோர் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் சேர்ந்துகொண்டார். சோரோஸுடன் சேர்ந்து மலேசியாகினியும் “அவர்களுக்கு விருப்பமானவர்களைப் பிரதமராகவும் அமைச்சர்களாகவும் அமர்த்த”த் திட்டமிடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

“மாற்றரசுக் கட்சியினருக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் சோரோஸுக்கு அளிக்கப்படும் வாக்காகும்” என்றுகூட அவர் எச்சரித்திருந்தார்.

சோரோஸை நெடுகிலும் ஒரு கெட்டவராக சித்திரித்து வந்துள்ள மகாதிர், தமது பெர்டானா குளோபல் அறக்கட்டளை வழி போரைச் சட்டவிரோதமாக்கி உலக அமைதியை ஏற்படுத்தும் திட்டமொன்றைத் தொடக்கியபோது அதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று சோரோஸுக்குக் கடிதம் எழுதிக் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அண்மையில், அனைத்துலக வாராந்திர ஏடான எக்கோனமிஸ்ட் ஒரு கட்டுரையில் 13வது பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க அம்னோவும் அதற்கு ஆதரவாக செயல்படும் ஊடகங்களும் மாற்றரசுக் கட்சிக்குப் பரிவு காட்டுவதாகக் கருதும் எந்தவொரு அமைப்பின்மீதும் விஷத்தை வாரிக் கொட்டும் பழக்கம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தது.

“மாற்றுத்தரப்புகள் யூதர்களிடம் அமெரிக்காவிடம் சோரோஸிடம் பணம் பெறுகிறாகள் என்ற புரளியெல்லாம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

”இப்படிப்பட்ட அவதூறுகள் வாக்காளர்களைக் கவருமா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், இவை, நம்பிக்கையிழந்த நிலையின் அறிகுறி என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது”.