குவான் எங்: கணக்காய்வாளர் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்

இன்று நடைபெற விருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தின் போது தலைமை கணக்காய்வாளர் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

இவ்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டால்தான் மாநில அரசு அதனிடம் ஆகஸ்ட் 30 இல் தாக்கல் செய்யப்பட்ட கணக்காய்வு அறிக்கையை வெளியிட முடியும்.

“ஏன் இவ்வளவு காலதாமதம்? இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையை அவர்கள் கூடிய விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்”, என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் இன்று கூறினார்.

“மத்திய அரசாங்கம் கடந்த ஒன்றரை மாதங்களாக அந்த அறிக்கையை வைத்துக் கொண்டுள்ளது. இதர மாநிலங்களின் அறிக்கைகள் நிச்சயம் கிடைத்திருக்கும் என்று நான் கருதுகிறேன்”, என்று அவர் மேலும் கூறினார்.

பினாங்கு மாநில கணக்காய்வாளர் அறிக்கை சட்டமன்றம் நவம்பர் 1 இல் கூடும் போது தாக்கல் செய்யப்படும் என்றாரவர்.

அந்த அறிக்கை மாநில அரசுக்கு சாதகமானதா என்று வினவப்பட்டதற்கு, அவர் பதிலலிக்க மறுத்து விட்டார்.

“விதி முறைக்கு உட்படாதிருத்தல் அல்லது பலவீனங்கள் அல்லது நாங்கள் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் ஏதேனும் இருக்குமானால், அவற்றை நாங்கள் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வோம். அதில் உண்மையற்ற குற்றச்சாட்டுகள் இருக்குமானால், நாங்கள் பதில் கூறுவோம்”, என்று லிம் கூறினார்.

“இதில் முக்கியமானது என்னவென்றால், அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு என்பதாகும்”, என்பதை வலியுறுத்திய அவர், மாநிலம் விதிகளுக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும். நாங்கள் செய்வதற்கு முன்பு நாடாளுமன்றம் முழு அறிக்கையையும் தாக்கல் செய்வதற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் மேலும் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

TAGS: