விபத்து அதிகம் நடக்கும் இடங்களில் ஏஇஎஸ் இல்லையே, ஏன்?

விபத்துகளைத் தடுக்கும் நோக்கில்தான் போக்குவரத்துக் குற்றங்களைக் கண்காணிக்கும் தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) கொண்டுவரப்பட்டது. ஆனால், அது விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களில் இல்லாதது ஏன் என்று பாஸ் தொடர்புள்ள என்ஜிஓ-வான Kempen Anti Saman Ekor (கேஸ்) கேள்வி எழுப்பியுள்ளது.

“அது அமைந்துள்ள இடங்களைப் பார்த்தால் எங்களுக்கு சந்தேகம்தான் வருகிறது. மணிக்கு 50 கி.மீட்டர் பகுதிகளில் மணிக்கு 70 கி.மீட்டர் பகுதிகளில் சில அமைந்துள்ளன.

“அந்த இடங்களில் என்ன மோதிக்கொள்ளப் போகிறது, மலைப் பாம்பும் ஆமையும் மோதிக்கொள்ளுமா? அல்லது மாட்டு வண்டிகள் மோதிக்கொள்ளப் போகின்றவா?”, என்று அந்த அமைப்பின் தலைவரும் பொக்கோக் சேனா எம்பியுமான மாபுஸ் ஒமார் (வலம்) வினவினார். அவர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பேசினார்.

ஏஇஎஸ் நிறுவப்பட்டுள்ள பல இடங்களைச் சுற்றிப்பார்த்துவிட்டு அப்போதுதான் திரும்பியிருந்த மாபுஸ், ஏஇஎஸ்-இல் ஒரு தொழில்நுட்ப சிக்கலும் இருப்பதாகக் கூறினார். அது சுழியம், ஆறு, ஒன்பது ஆகிய எண்களை வேறுபடுத்திப் பார்ப்பதில் சிக்கலை எதிர்நோக்குகிறது. அதன் படங்களில் ஆறும் ஒன்பதும் சுழியம் எனப் பதிவாவதாக அவர் சொன்னார்.

நேற்று நாடாளுமன்றத்தில், ஏஇஎஸ் முறையின் அமலாக்கத்தைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கட்சி வேறுபாடின்றிக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. அதை நடைமுறைப்படுத்துமுன்னர் வேகக் கட்டுப்பாடுகள் ஒழுங்குபடுத்த வேண்டும், தொழில்நுட்பச் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்று கூறப்பட்டது. அதே உணர்வையே மாபுஸும் இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் வெளிப்படுத்தினார்.

 

TAGS: