குவான் எங்: கணக்கறிக்கையை இன்றே தாக்கல் செய்க

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், தலைமைக் கணக்காய்வாளர் (ஏஜி) அறிக்கையை இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்திலேயே தாக்கல் செய்ய வேண்டுமாய் கூட்டரசு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அது வெளியிடப்பட்டால் மாநிலங்கள் அவற்றின் கணக்கறிக்கைகளை வெளியிட வசதியாக இருக்கும் என்றாரவர். மாநில அரசுகளின் கணக்கறிக்கை அந்தந்த அரசுகளிடம் ஆகஸ்ட் 30-இலேயே கொடுக்கப்பட்டு விட்டது.

“அதில் ஏன் தாமதம்? தாமதத்தை ஏற்பதற்கில்லை. இயன்ற விரைவில் ஏஜி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்”, என்றவர் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

“கூட்டரசு அரசாங்கம் ஒன்றரை மாதத்துக்குமேல் அறிக்கையை வெறுமனே வைத்துக்கொண்டிருக்கிறது”, என லிம் குறிப்பிட்டார்.

பினாங்கு மாநிலம் அதன் கணக்கறிக்கையை நவம்பர் முதல் நாள் சட்டமன்றம் கூடும்போது தாக்கல் செய்யும்.

அந்த அறிக்கை பினாங்கு அரசுக்குச் சாதகமாக இருக்கிறதா என்று வினவியதற்கு அவர் பதில் சொல்லவில்லை.

மாநில அரசுகள் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருப்பதாக அவர் சொன்னார். கூட்டரசு அரசாங்கம் முழு அறிக்கையைத் தாக்கல் செய்த பின்னரே மாநில அறிக்கையை வெளியிட முடியும்.