போலீஸ் எல்ஆர்டி நிலையங்களை மூடச் சொல்லவில்லை

பெர்சே 3.0 பேரணியின்மீது கண்ணீர் புகைக் குண்டுகள் பாய்ச்சப்பட்ட பிறகு டாட்டாரான் மெர்டேகாவைச் சுற்றியுள்ள இரயில் நிலையங்களை மூட வேண்டும் என்று போலீஸ் உத்தரவிடவில்லை என்று ப்ராசரானா அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

இரயில் நிலையங்களை மூடப்பட்டதற்குத் தாமே பொறுப்பு என்று ப்ராசரானா இரயில் பிரிவு இயக்குனர் கைரானி முகம்மட் (வலம்) கூறினார். டாட்டாரான் மெர்டேகாவுக்கு அருகில் உள்ள மஸ்ஜித் ஜாமெக் எல்ஆர்டி நிலையத்துக்குள் மக்கள் நுழைந்தால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்று அஞ்சியே அவ்வாறு முடிவு செய்ததாக அவர் சொன்னார்.  

திருவிழாபோல் காணப்பட்ட ஒரு சூழல் கண்ணீர்புகைக் குண்டு பாய்ச்சப்பட்டதும் அப்படியே மாறியது. எங்கும் பீதி நிலவியது. பயணிகள், பணியாளர்களின் பாதுகாப்பு பற்றிய அச்சம் தோன்றியது. நிலையங்களின் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படலாம் என்ற பயமும் ஏற்பட்டது..

கைரானி மனித உரிமை ஆணையத்தின் பொது விசாரணையில் இன்று சாட்சியமளித்தார். மற்ற நிலையங்களின் நிர்வாகிகளும் தம்மைத் தொடர்புகொண்டு இதேபோன்ற நிலவரம் நிலவுவதாகக் கூறினர்.  எனவே,அந்த நிலையங்களை மூட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்க வேண்டியதாயிற்று என்றார்.

இதற்கு முன்பு இப்படி இருந்ததில்லை என்றாரவர். ரீபோர்மாசி ஆர்ப்பாட்டம் தொடங்கி மற்ற ஆர்ப்பாட்டங்களின்போதெல்லாம் போலீசுடன் ஒருங்கிணப்புக் கூட்டம் நடக்கும். போலீஸ் அதிகாரிகளும் நிலையங்களில் இருப்பார்கள், எப்போது நிலையங்களை மூட வேண்டும் என்று ஆலோசனை கூறுவார்கள் என்றவர் கூறினார்.

 

 

TAGS: