டெலிகோம் மலேசியா (டிஎம்) பெர்ஹாட்டின் கொள்கைகள் “வாடிக்கையாளருக்கு ஆதரவாக”இல்லை. அதனால்தான் இணையத்தளச் சேவைகளுக்கு இரட்டைக் கட்டணம் விதிக்கப்படுவதாக கெராக்கான் தலைவர் ஒருவர் குறைகூறியுள்ளார்.
கெராக்கான் இளைஞர் துணைத் தலைமைச் செயலாளர் இங் சீ வே நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வாடிக்கையாளர்கள் தங்கள் இணையச் சேவையை அதி விரைவாக செயல்படும் யுனிஃவை-க்குத் தரம் உயர்த்திய பின்னரும் ஸ்ட்ரீமிக்ஸ் கணக்குக்கும் சேர்த்தே கட்டணம் விதிக்கப்படுவதாக தம்மிடமும் புகார் தெரிவித்திருக்கிறார்கள் என்றார்.
அந்நிறுவனம் “வாடிக்கையாளருக்கு ஆதரவான” கொள்கையைக் கடைப்பிடித்திருந்தால் இப்படி ஒரு பிரச்னை எழுந்திருக்காது என்றாரவர்.
“வாடிக்கையாளர்கள் சுட்டிக்காட்டினால் கூடுதல் கட்டண விதிப்பை நீக்கிவிட அந்நிறுவனம் தயாராகவே உள்ளது. ஆனால் அதற்காக மெனக்கெட்டு அந்நிறுவனத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. வாடிக்கையாளர்கள் வேலை செய்பவர்கள் என்பதால் அதற்கு நேரம் இருப்பதில்லை”.
சேவையை யுனிஃவை- க்குத் தரம் உயர்த்தும்போதே ஸ்ட்ரீமிக்ஸ் கணக்கை முடித்துக்கொள்ளவும் டெலிகோம் பணியாளர்கள் அல்லது யுனிஃவை சேவை வழங்குவோர் வாடிக்கையாளர்களுக்கு உதவ வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.
டெலிகோம் மலேசியா, யுனிஃபை-க்கு இணையச் சேவையை தரம் உயர்த்துபோது வாடிக்கையாளர்களின் ஸ்ட்ரீமிக்ஸ் கணக்கு இயல்பாகவே இரத்தாவதில்லை என்றும் இதனால் வாடிக்கையாளர்கள் இரட்டைக் கட்டண விதிப்பை எதிர்நோக்குவதாகவும் நேற்று மலேசியாகினியும் செய்தி வெளியிட்டிருந்தது.