பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இந்திய-முஸ்லிம்கள் தாங்கள் ஓரங்கட்டப்படுவதாகக் நினைக்கக்கூடாது என்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்தும் வகையில் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர் அரசுப் பதவிகள் வகித்து வந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
“போதுமான (இந்திய-முஸ்லிம்) பிரதிநிதித்துவம் இல்லை என்று முறையிடுவோரிடம் கேட்கிறேன்- இதை உரத்த குரலில் சொல்ல விரும்பவில்லை- அரசின் தலைமைச் செயலாளர் யார் (அலி ஹம்சா)?”
இன்று காலை 36வது இந்திய முஸ்லிம் காங்கிரசின்(கிம்மா) பேராளர் மாநாட்டில் உரையாற்றிய நஜிப், முன்னதாக கிம்மா தலைவர் சைட் இப்ராகிம் காதர் தம்முரையில் அச்சுமூகம் பின்தங்கிக் கிடப்பதாகக் கூறியதற்கு மறுமொழியாக இவ்வாறு கூறினார்.
“அவர் (அலி) விசுவாசமாக இருக்கிறார். நல்ல மனிதர். மலாய்க்காரர்களால் முடியும். கிம்மாவால் முடியும். எல்லாராலும் முடியும். நம்மிடையே வேறுபாடு அதிகம் இல்லை. நம்மைத் தடுக்கும் சுவர் எதுவும் இல்லை”, என்று கூறியவர் இந்திய-முஸ்லிம்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதாக உறுதி அளித்தார்.
சைட் இப்ராகிம் அவரது உரையில், 1976-இல் ஓர் அரசியல் கட்சியாக பதிவான கிம்மா 2010-இல் அம்னோவில் இணை உறுப்புக்கட்சி ஆனதாகவும் கூறினார். ஆனால், மாநில அளவிலும் தொகுதிகள் அளவிலும் அம்னோவிடமிருந்து ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்றார்.
“பலர் அதை அறியவில்லை. மற்றவர்கள் இணை உறுப்பியம் என்பதை ஏளனமாகப் பார்க்கிறார்கள்.”
பிரதமரிடம் 18-கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் ஒன்றையும் அவர் முன்வைத்தார். பல்கலைக்கழகங்களில் இந்திய-முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, பிறப்புச் சான்றிதழில் “இந்திய-முஸ்லிம்” எனக் குறிப்பிடுதல், ஊராட்சி மன்றங்களிலும் மாநில இஸ்லாமிய சமய விவகார மன்றங்களிலும் கிம்மாவுக்கு இடமளித்தல் போன்றவை அக்கோரிக்கைகளில் சில.
‘இந்திய முஸ்லிம்கள் அம்னோவின் ஒரு பகுதியினர்’
இந்திய-முஸ்லிம்களின் பிரச்னைகளைக் கவனிப்பதாகக் கூறிய நஜிப், அம்னோ அவர்களுடன் ஒத்துழைக்கும் என்றார். அதே வேளை கோரிக்கைகளின் பட்டியலைக் கண்டு மலைத்துப் போனதாகவும் கூறினார்.
“இவ்வளவு நீண்டதொரு பட்டியலை இதற்குமுன் எந்த மாநாட்டிலும் நான் கண்டதில்லை. இந்திய-முஸ்லிம் சமூகம் பெரியதல்ல. ஆனால் அவர்களின் தீர்மானங்களின் பட்டியல் மிகவும் நீளமானது. அம்னோவின் தீர்மானங்கள்கூட இதற்குமுன் நிற்க மாட்டா”, என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
அம்னோவில் இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதாகக் கூறினார். குறிப்பாக, பினாங்கில் பாதிப்பேர் இந்திய-முஸ்லிம்கள்தான்.
அங்குதான் அம்னோவின் கூட்டக்குறிப்புகள் தமிழில் எழுதப்பட்ட அதிசயத்தைக் கண்டதாகவும் நஜிப் குறிப்பிட்டார்.
பிஎன்னுக்கு கிம்மா தளராத ஆதரவளித்து வருவதால்தான் அது கேட்கும் நிதியுதவியைச் செய்ய தாம் என்றும் தயங்கியதில்லை என்று கூறி, ஆளும் கூட்டணி ஒரு வலுவான பெரும்பானமை பெற கிம்மா உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.