வெளிநாட்டு வாக்களிப்பு: தென்கொரியர்கள் வழி காண்பிக்கிறார்கள்

நமது தேர்தல் ஆணையம் வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்வதற்குத் தத்தளிக்கும் வேளையில் மலேசியாவில் உள்ள தென்கொரியர்கள் முதன்முறையாக அவர்கள் நாட்டில் நடைபெறும் அதிபர் தேர்தலில் இங்கிருந்தபடியே வாக்களிக்க ஆயத்தமாகி வருகிறார்கள்.

சுபாங் ஜெயாவில் உள்ள சன்வே மாநாட்டு மையத்தில் நேற்றுடன் முடிவுக்கு வந்த கொரிய தினக் கண்காட்சியில், தூதரக அதிகாரிகளும் தன்னார்வலர்களும் இங்குள்ள தென்கொரியர்களை தொகுதியில் இல்லா வாக்காளர்களாக பதிவு செய்ய சாவடி ஒன்றை அமைத்தனர்.

மலேசியாகினி, கொரிய வெளிநாட்டுத் தேர்தல் அதிகாரி சிம் ஹியுன் உவா-வைச் சந்தித்துப் பேசியபோது 2007-ல் அதற்கான சட்டத் திருத்தம் செய்யப்பட்டதாகவும் ஆனால், 2011-இல்தான் அதை நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடங்கியதாகவும் குறிப்பிட்டார்.

“அவர்கள் கொரியாவில் இல்லையென்றால், அதை அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் அங்கில்லை என்பது உறுதியானதும் அவர்கள் தூதரகம் சென்று வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்”, என்று சிம்முக்கு மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்த தன்னார்வலர் சன்னி ஹுவாங் இயுன் சன் கூறினார்.

தென்கொரியர்கள் 19-வயதில் அடையாள அட்டைக்குப் பதிவு செய்துகொள்ளும்போதே அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்று விடுகின்றன என்றவர் தெரிவித்தார். ஆனால், அவர்கள் வெளிநாட்டிலிருந்து வாக்களிக்க விரும்பினால் அதற்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

இந்த வெளிநாட்டு வாக்களிப்புமுறை இவ்வாண்டு ஏப்ரலில் நடைபெற்ற தேசியப் பேரவைத் தேர்தலின்போது நடைமுறைக்கு வந்தது. இப்போது நடைபெறும் பதிவு டிசம்பர் 19-இல் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கானது என்றாரவர்.

மலேசியாவில் வாக்களிக்கும் தகுதியுள்ள 11,500 தென்கொரியர்கள் வசிப்பதாக சிம் கூறினார். ஆனால், தங்கள் தொகுதிக்கு வெளியிலிருந்து வாக்களிக்க அனுமதிகேட்டு அவர்களில் 2050பேர் மட்டுமே மனுச் செய்திருப்பதாக அவர் சொன்னர்.

அடுத்த சனிக்கிழமையுடன் முடிவுக்கு வரும் நடப்புப் பதிவு இயக்கத்தில் மேலும் சுமார் 2,300 பேர் வெளிநாட்டில் உள்ள வாக்காளர்களாக பதிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்படுகிறது.

TAGS: