மலாய் மேலாண்மையால் மலாய்க்காரர்-அல்லாதாரின் உரிமைகள் படிப்படியாகக் கரைந்துபோகலாம்

மலாய் மேலாண்மை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தால், மலேசியாவின் மற்ற இனங்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமின்றிப் போகும் என்று பாஸ் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

“மலாய் மேலாண்மை” என்பது மலாய்க்காரர் உரிமைகளைப் பாதுகாப்பதைவிட அம்னோ நீண்டகாலம் நிலைத்திருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கம் கொண்டது என்று பாஸ் மத்திய செயலவை உறுப்பினர் முஜாஹிட் யூசுப் ராவா கூறினார்.

அதற்கு ஓர் எடுத்துக்காட்டு காண்பிக்க முனைந்த முஜாஹிட், “கிளந்தானில் பாஸ் ஆள்கிறது. அங்கு பெரும்பாலோர் மலாய்க்காரர்கள். ஆனால் மத்திய அரசு அம்மாநிலத்துக்குரிய எண்ணெய் உரிமப் பணத்தைக் கொடுக்க மறுக்கிறது”, என்று கூறினார்.

“இதைக்கூட செய்யாதவர்கள் மலாய்க்காரர்-அல்லாதாரின் உரிமைகளை எப்படித் தற்காக்கப் போகிறார்கள்?”

நேற்று பினாங்கில், இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னணியும் சுதந்திர மையமும் ஏற்பாடு செய்திருந்த ‘Masih Relevankah Ketuanan Melayu?’என்ற கருத்தரங்கில் அவர் பேசினார். சுமார் 40பேர் அதில் கலந்துகொண்டனர்.

பாஸ் நிறுவனர் யூசுப் ராவாவின் புதல்வரான முஜாஹிட், எல்லா இனத்தவரையும் சிறுபான்மையினரையும் பாதுகாக்க வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துவதைத் தம் கட்சி தெளிவாக உணர்ந்து வைத்திருப்பதாகக் கூறினார்.

மலாய் மேலாண்மையைத் தற்காக்கும் நடவடிக்கை “ஊழலுக்கும் குறுகிய மனப்போக்குக்கும்” இட்டுச் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.

அதனால்தான் பாஸ் “அனைவருக்கும் நியாயம்” என்ற அடிப்படையில் அமைந்த இஸ்லாமிய நாட்டை உருவாக்கும் முயற்சியைக் கைவிடாது என்றவர் கூறினார்.

இப்படிச் சொல்வதால் பாஸ் “இஸ்லாத்தின் மேலாண்மையை” வலியுறுத்துவதாக பொருள் செய்துகொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“அந்த உத்தரவாதம் (அனைவருக்கும் நியாயம்) திருக்குர் ஆனில் உண்டு. அரசமைப்பில் இல்லை”, என்றார்.

TAGS: