முன்னாள் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசன், அன்வார் இப்ராகிம் மீது தொடுத்திருந்த அவதூறு வழக்கை மீட்டுக்கொண்டார். முதலாவது குதப்புணர்ச்சி வழக்கில் பொய்ச் சாட்சியங்கள் தயாரிக்கப்பட்டதாக மாற்றரசுக் கட்சித் தலைவர் செய்திருந்த போலீஸ் புகாரின் தொடர்பில் அந்த அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது.
முன்னாள் போலீஸ் தலைவர் வழக்கை மீட்டுக்கொள்வதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதி ஆணையர் அஸ்மாபி முகம்மட் முன்னிலையில் கூறப்பட்டு பதிவும் செய்யப்பட்டது.
அன்வார் ஆதரவாளர்கள் நிரம்பி இருந்த நீதிமன்ற அறையில் மூசாவின் வழக்குரைஞர்கள் ஹஸ்னல் ரெஸுவா மரைக்கானும் கமருல் ஹிஷாம் கமருடினும் அஸ்மாபியிடம் அதைத் தெரிவித்தனர்.
மூசா வழக்கை மீட்டுக்கொள்வதால் தாங்கள் செலவுத் தொகை கேட்கப்போவதில்லை என்று அன்வாரின் வழக்குரைஞர் என்.சுரேந்திரன் கூறினார்.
2008-இல் முதலாவது குதப்புணர்ச்சி வழக்கில், அன்வார் இப்ராகிம் சாட்சியங்களில் புரட்டு வேலைகள் நடந்திருப்பதாகக் குற்றம் சுமத்தி அவருக்கும், சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல், முன்னாள் கோலாலும்பூர் சிஐடி தலைவர் மாட் ஜைன் இப்ராகிம், கோலாலும்பூர் மருத்துவமனையின் நோய்க்குறியியல் வல்லுநர் டாக்டர் அப்துல் ரஹ்மான் முகம்மட் யூசுப் ஆகியோருக்கும் எதிராக போலீஸ் புகார் செய்ததை அடுத்து மூசா அந்த வழக்கைத் தொடுத்தார்.