கோலாலம்பூர் ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் கோயிலை உடைக்க DBKL நோட்டீஸ்

கோலாலம்பூர் ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் 100 ஆண்டுகால ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயிலை உடைப்பதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் கோயில் நிருவாகத்தினருக்கு கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி இம்மாதம் 24 ஆம் தேதி வாக்கில் கோயில் உடைக்கப்படவிருக்கிறது.

DBKL-லின் கோயில் உடைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க நாளை (அக்டோபர் 19) காலை 11 மணிக்கு ஜாலான் ராஜா லாவுட்டில் எதிர்ப்பு கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் எம். மனோகரன் கூறினார்.

“இக்கோயில் உடைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவது நமது கடமையாகும். 2008 ஆம் ஆண்டில் தீபாவளிக்கு முன்பு கம்போங் ஜாவா கோயில் உடைக்கப்பட்டது.

“இப்போது இவ்வாண்டு தீபாவளிக்கு முன்னர் கோலாலம்பூர் ஜாலான் பி.ரமலியில் அமைந்திருக்கும் கோயில் உடைக்கப்படவிருக்கிறது. இதை நாம் அனுமதிக்கக் கூடாது”, என்று செம்பருத்தி தொடர்பு கொண்டபோது மனோகரன் கூறினார்.

இக்கோயில் நிலப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு மிட்வேலி மேம்பாட்டாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கையை பின்பற்றுமாறு இக்கோயில் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் மேம்பாட்டாளரிடம் ஆலோசனை கூறப்பட்டது.

மேலும், இது குறித்த நீதிமன்ற விசாரணை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் 1 இல் தொடங்கவிருக்கிறது என்று கூறிய மனோகரன், “அதற்கு முன்பாக ஏன் இந்த அவசரம்? என்ன நடந்தது? இந்த முட்டாள்தனமான நடவடிக்கையை அனுமதிக்கக் கூடாது”,  என அவர் மேலும் கூறினார்.

“இவ்விவகாரம் சமயம் சார்ந்தது என்பதை அதிகாரிகள் உணர வேண்டும். அதற்கு மக்கள் ஒன்றுதிரள வேண்டும். ஈடுபாடுள்ள அனைவரும் திரளாக வருமாறு கேட்டுக்கொள்கிறேன்”, என்று மனோகரன் வேண்டுகோள் விடுத்தார்.

ஹிண்ட்ராப் மனித உரிமைக் கட்சியின் முன்னால் தகவல் பிரிவு தலைவர் எஸ். ஜெயதாஸ் இந்த எதிர்ப்பு கூட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளதோடு மக்களை திரண்டு வருமாறு கேட்டுக் கொண்டடர்.

TAGS: