அமைச்சர் முகம்மட் நஸ்ரியின் மகன் முகம்மட் நெடிம் நஸ்ரியின் மெய்க்காவலர் சம்பந்தப்பட்ட அடிதடி வழக்கு தொடர்பில் உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த பதிலில் பிகேஆருக்குத் திருப்தி இல்லை.
“முகம்மட் நெடிம் நஸ்ரி (வலம்)மீது குற்றவியல் சட்டம் பிரிவு 160-இன்கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணை என்னவாயிற்று?”, என்றது வினவியது.
“விசாரணை நடைபெற்றதை ஒப்புக்கொண்ட உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் குற்றச்சாட்டிலிருந்து நெடிம் விடுவிக்கப்பட்டாரா என்பதைச் சொல்ல மறுக்கிறார்”, என பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கூறினார்.
நெடிமின் மெய்க்காவலருக்கும் ஒரு கொண்டோமினியத்தின் பாதுகாவலர்களுக்குமிடையிலான வழக்கு “அமைதியான முறையில் தீர்க்கப்பட்டதாக” அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் குறிப்பிட்டிருந்தார்.
கொண்டோமினிய பாதுகாப்புக் கண்காணிப்பாளர் தாக்குதப்பட்டதன் தொடர்பில் நெடிம் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணை பற்றி அறிந்துகொள்ள விரும்பிய கிளானா ஜெயா எம்பி, லோ குவோ பர்னுக்கு வழங்கிய பதிலில் அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
“சட்டத்தின் முன் அனைவரும் சமம்; இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பாதுகாவலருக்கு நியாயமும் பாரபட்சமற்ற நீதியும் கிடைப்பது முக்கியம்” என்று சுரேந்திரன் கூறினார்.
“இவ்வழக்கின் உண்மையான விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் தாக்குதல் வழக்கு தொடர்பில் மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறோம்”, என்றாரவர்.
அரசாங்கம் குற்றச்செயலுக்கு உடந்தையா?
சமரசத் தீர்வுக்கு ஹிஷாமுடினே அங்கீகாரம் வழங்கி இருப்பதை ஒரு சட்டவிரோத செயலுக்கு அவர் உடந்தையாக இருந்திருக்கிறார் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம் என்று கூறிய சுரேந்திரன், நாடாளுமன்றத்துக்கு அளித்துள்ள பதிலில் அவர் “சட்டத்தின் செயல்முறையை அதன் நேர்மையை வெளிப்படையாகவே அவமதித்துள்ளார் என்றார்.
“குற்றம் நிகழ்ந்திருந்தால் குற்றமிழைத்தவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுக் குற்றம் சாட்டப்பட வேண்டும். நம் சட்ட அமைப்பில் குற்றங்களுக்கு ‘சமரசத் தீர்வு’ காணவியலாது.
“அப்படி ஒரு ‘தீர்வு’க்கு அங்கீகாரம் வழங்கியதன் மூலமாக ஹிஷாமுடின் ஒரு சட்டவிரோதச் செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளார்”, என்றாரவர்.
அம்னோவின் உயர் அமைச்சர்களில் ஒருவரின் மகன் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால்தான் வழக்கில் “சமரசம்” செய்துகொள்ளப்பட்டதா என்றும் அந்த பிகேஆர் உதவித் தலைவர் வினவினார்.
எப்படி சட்டவிரோத தீர்வு காணப்பட்டது என்பதை விளக்க வேண்டும் என்று கோரிய சுரேந்திரன், “நீதிமுறை மீறப்பட்டதா என்பதைத் தெரிதுகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு”, என்றார்.