ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயில் உடைப்பு நோட்டீஸை DBKL உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொண்டது

கோலாலம்பூர், ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயிலை உடைப்பதற்காக கோலாலம்பூர் மாநகர் மன்றம் வழங்கிய நோட்டீஸை உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அம்மன்றம் கோயில் நிருவாகக் குழுவின் தலைவருக்கு கடிதம் மூலம் இன்று பின்னேரத்தில் அறிவித்தது.

(காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்)

ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயிலை உடைக்கும் டிபிகேஎல்லின் நடவடிக்கைக்கு இன்று எதிர்ப்பு தெரிவித்து சுமார் 60 மேற்பட்ட மக்கள் மாநகர் மன்றத்தின்முன் காலை மணி 11.00 க்கு கூடினர்.

இது சம்பந்தமாக கூட்டரசு பிரதேச நகர் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ராஜா நோங் சிக் மற்றும் டத்தோ பண்டார் ஆகியோர் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் எம். மனோகரனையும் பிகேஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரனையும் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சரும் டத்தோ பண்டாரும் காணப்படவில்லை.

துணை அமைச்சர் எம். சரவணன் மகஜரைப் பெற்றுக்கொள்ள முன்வந்தார். அதனை அங்கு குழுமியிருந்த மக்களும் தலைவர்களும் முற்றாக நிராகரித்தனர்.

மேலும், அமைச்சரும் டத்தோ பண்டாரும் அங்கு வரும் வரையில் கூட்டத்தினர் அங்கேயே தங்கியிருக்கப் போவதாக சுரேந்திரன் அறிவித்தார்.

101 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயில் 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை கோயில் நிருவாகக்குழு தலைவர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் காட்டினார்.

சர்சைக்குள்ளாகியிருக்கும் நிலத்தை விட்டுக் கொடுக்குமாறு தங்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது என்று கூறிய கோயில் நிருவாகக்குழு தலைவர் பாலகிருஷ்ணன், நிருவாகக்குழு ஓர் அங்குல நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க முடியாது என்று பதில் அளித்ததாகக் கூறினார்.

அமைச்சரும் டத்தோ பண்டாரும் காணப்படாததால் கூட்டத்தினரிடமிருந்து காரசாரமான கருத்துகள் உதிர்ந்தன. ஒன்று அமைச்சர் வர வேண்டும்; இல்லையேல் கோயிலை உடைக்க கொடுக்கப்பட்டிருக்கும் நோட்டீஸ் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மனோகரனும் இதர தலைவர்களும் கடுமையாக அங்கிருந்த மாநகர் மன்ற அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

இறுதியில், மாநகர் மன்ற துணை இயக்குனர் அலியாஸ் பின் மார்ஜோ கோயிலை உடைப்பதற்கான நோட்டீஸை திரும்பப் பெற ஒப்புக்கொண்டு அதனை உறுதிப்படுத்தும் கடிதத்தை கோயில் தலைவரிடம் பிற்பகல் மணி 3.00 வாக்கில் வழங்க ஒப்புக்கொண்டார்.

இன்று பின்னேரத்தில் வழங்கப்பட்ட அக்கடிதத்தில் இவ்விவகாரம் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 1 ஆம் தேதி விசாரணைக்கு வரவிருப்பதால், கோயிலை உடைப்பதற்காக அளிக்கப்பட்ட நோட்டீஸை உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதம் வழங்க ஒப்புக்குக் கொண்டதை ஏற்றுக்கொண்ட என். சுரேந்திரன் இது மாநகர் மன்றத்தின் பெருந்தன்மை என்று கருதக்கூடாது என்றார்.

“மாநகர் மன்றம் முதலில் இதனைச் செய்திருக்கவே கூடாது. இது இந்திய சமூகத்தை அவமானப்படுத்தும் செயலாகும். அதுமட்டுமல்ல, அது அவர்களுக்கும் அவமானச் செயலாகும்”, என்று கூறினார்.

மாநகர் மன்றம் சமய வழிபாட்டுத் தலங்களை, அது எந்த சமயத்தின் தலங்களாக இருந்தாலும், தன்மூப்பாக உடைக்கும் நடவடிக்கைகளில் இறங்கக்கூடாது என்று எம். மனோகரன் கூறினார். “மாநகர் மன்றம் இனிமேலும் இவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கக்கூடாது” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மாநகர் மன்றம் கோயிலை உடைப்பதற்கு கொடுத்த நோட்டீஸ் திரும்பப் பெறப்படும் என்பது நிரந்தமான வெற்றியாகக் கருதக்கூடாது என்று ஹிண்ட்ராப் மனித உரிமைக் கட்சியின் முன்னாள் தகவல் பிரிவுத் தலைவர் எஸ்.ஜெயதாஸ் கூறினார்.

கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளில் கோலாலம்பூரில் ஒரு கோயில்கூட அரசாங்கப் பதிவேட்டில் பதிவு செய்யப்படவில்லை. அனைத்து கோயில்களும் கெஜட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளின் கூட்டணியின் பொதுச் செயலாளர் குணராஜ் கோலாலம்பூர் மாநகர் மன்ற எல்லைகுட்பட்ட அனைத்து கோயில் விவகாரங்களைக் கவனிக்க மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் எ. வைத்திலிங்கத்தின் தலைமயில் நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு என்ன ஆயிற்று என்று வினவினார்.

“எந்த ஒரு கோயிலும் உடைக்கப்படக்கூடாது. ஒவ்வொரு கோயிலையும் பாதுகாத்து நல்ல முறையில் மேம்படுத்த வேண்டும். அதற்கு மிட்வேலி முறையப் பின்பற்ற வேண்டும்”, என்று குணராஜ் கூறினார்.

TAGS: