உங்கள் கருத்து: “ரப்பரை வெட்டி நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த இந்தியர்கள் இன்று சாலையோரப் பட்டமரங்களாக நிற்கிறார்கள்”.
இந்திய இளைஞர் குண்டர்தனத்தை விசாரிக்க தனி ஆணையம் தேவை
ஏசிஆர்: உண்மையில் அது தேவைதான். அதை நினைவுபடுத்திய டிஏபி தலைவர் லிம் கிட் சியாங்குக்கு நன்றி.
அம்னோவும் மஇகாவும் தமிழ்ப்பள்ளிகளுக்கு சொற்ப தொகையையும் 70, 80 வயதானவர்களுக்குக் குடியுரிமையும் கொடுத்துவிட்டு ஊடகங்களில் அதைப் பெரிதாக விளம்பரப்படுத்திக்கொள்வதில்தான் குறியாக இருப்பார்கள். இந்திய சிறிய, நடுத்தர தொழில்முனைவர்களுக்கு ரிம150 மில்லியன் ஒதுக்குவார்கள். தங்கள் அல்லக்கைகளுக்கு பில்லியன் கணக்கில் வாரிக் கொடுப்பார்கள்.
அப்படி ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படுமானால் அது, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்தான் அம்மக்களைத் திட்டமிட்டு ஓரங்கட்டினார் என்பதைக் கண்டறியும். அவரது காலத்தில்தான் பெரும்பாலான தோட்டங்கள் சிதைவுற்றன.அவற்றிலிருந்த தொழிலாளர்களின் எதிர்காலம் பற்றியோ அவர்களின் குடும்பங்கள் பற்றியோ எவரும் கவலைப்படவில்லை.
கிரி: லிம் சொல்வது முற்றிலும் உண்மை. நான் ஒரு இந்தியன். மிகவும் மோசமான நிலையிலிருந்த ஒரு தொடக்கநிலை பள்ளியில் கல்வி கற்றேன்.
அங்கிருந்த இந்தியச் சிறார்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் வாழ்க்கையில் முன்னேறவும் விரும்பினார்கள். ஆனால், என்னதான் உயர்ந்த புள்ளிகளைப் பெற்றாலும் அவர்களால் உயர்கல்வி பெற முடியவில்லை.குடும்பத்தின் மொத்த வருமானமே ரிம600-தான். அதை வைத்துக்கொண்டு எப்படி உயர்கல்வி பெறுவது? எனவே, தந்தையர் வழியைப்,,பிள்ளைகளும் பின்பற்றினார்கள். அற்றைக்கூலிகளாக மாறினார்கள்.
அதை மிக நயமாக லிம் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்தான் உண்மையான மலேசியர்.
ஆர்.மகேந்திர ராஜ்: லிம் கிட் சியாங் அவர்களே, உங்களுக்கு எங்களின் வீர வணக்கம். எல்லா மலேசியர்களுக்காகவும் கலலைப்படும் ஒரு மலேசியர் நீங்கள்.
கேஎஸ்டி: இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய விவகாரம். சிறிது காலத்துக்குமுன்பு, பட்டர்வொர்தில் ஜூரு டோல் சாவடியைத் தாண்டியதும் ஒரே போக்குவரத்து நெரிசல். ஏதோ ஒரு குண்டர்கும்பல் தலைவனின் சவ ஊர்வலம்.
நூற்றுக்கணக்கான, சும்மா சொல்லவில்லை, நூற்றுக்கணக்கான இந்திய இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் சென்றார்கள். பலர் தலைக்கவச தொப்பிகளை அணிந்திருக்கவில்லை. அது ஒரு முக்கியமான சாலை. ஆனால், அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அக்கும்பலுக்கென்று கொடிகள் வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. கைகளில் கொடிகளையும் ஏந்தியிருந்தார்கள்.
அக்கும்பல் சட்டம் பற்றித் துளியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.வேறு இந்திய குண்டர் கும்பல் தலைவர்களின் ஈமச் சடங்குகள் யு-டியுப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மஇகா தலைவர் ஒருவர் அண்மையில் கோலாலும்பூர் மைன்ஸில் ஒரு விருந்து வைத்தாராம். ஒரு இந்திய குண்டர் கும்பலின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் அதில் கலந்துகொண்டார்களாம்.
இணையத் தளத்தில் அப்படியொரு செய்தி உலா வந்தது.
கிள்ளானில் சில வீடமைப்புப் பகுதிகள் உண்டு.அவை பிரேசிலின் சேரிப்பகுதிகள் போன்றவை. போலீஸ்கூட அங்கு கால் வைக்க அஞ்சும். இப்படி இந்தக் குண்டர்தனம் ஒரு தருணக் குண்டாக மிரட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்கள் அதற்கெதிராக எதுவும் செய்யாதிருப்பதுதான் உறுத்தலாக இருக்கிறது.
ஜெடை: சிங்கப்பூரில் சிறுபான்மை மலாய்க்காரர்களுக்கும் இந்தியர்களுக்கும்(கல்வி உள்பட) சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இங்கு ‘மலாய் மேலாண்மை’ என்ற பெயரால் பெரும்பான்மை இனமே எல்லாவற்றையும் கபளீகரம் செய்து விடுகிறது.
அதிலும் ஒரு சில மலாய்க்காரர்கள்தான் பயன் பெறுகிறார்கள். இப்படிப்பட்ட கொள்கைகள் தொடரும்வரை சிலர் ஒதுக்கப்படுவதும் ஓரங்கட்டப்படுவதும் இயல்பே.
ஒதுக்கப்படுவோர் போட்டிபோட முடியாத நிலையில், குற்றச் செயல்களை நாடிச் செல்கிறார்கள். லிம் கிட் சியாங், பிரச்னைக்கான காரணத்தைச் சரியாகவே சொல்லியிருக்கிறார்.
அம்னோ-பிஎன் என்ன செய்கிறது- பிழைக்கும் வழிமுறையைக் கற்றுத்தராமல் 500 ரிங்கிட்டைத் தூக்கிக் கொடுக்கிறது.
விஜயன் வேலாயுதம்: கடந்த 20ஆண்டுகளில் இந்திய தபால்காரரைப் பார்த்திருக்கிறீர்களா? குடிநீர் கட்டணச் சீட்டு வழங்கும் இந்தியரைப் பார்த்திருக்கிறீர்களா? நெடுஞ்சாலை கட்டண வசூலிப்புச் சாவடிகளில் இந்தியர்கள் பணி புரியப் பார்த்ததுண்டா? மருத்துவ மனை பணியாள்களாக? டிஎன்பி கட்டணச் சீட்டுக் கொடுப்போராக?
இவையெல்லாம் பிஎம்ஆர், எஸ்பிஎம் படித்தவர்களுக்கு அத்தேர்வுகளில் சிறப்பாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு உரிய வேலைகளாகும். படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறாத இந்திய இளைஞர்களை அரசாங்கமோ, அரசுதொடர்பு நிறுவனங்களோ கவனிக்கின்றனவா? அப்படி கவனிப்புக் காட்டப்படாத நிலையில் அந்த இளைஞர்கள் என்ன செய்வார்கள்?
ஆக, அரசாங்கத்தின் ஓரங்கட்டும் கொள்கையின் விளைவுதான் இது.
தொலு: 1மலேசியா பற்றிப் பேசும் நஜிப், இந்தியர்களுக்கு அவ்வப்போது சில ரொட்டித் துண்டுகளை மட்டும் வீசி எறிகிறார். அதுவும் தேர்தல் வரும் நேரமாகப் பார்த்து. எல்லா மலேசியர்களுக்கும்கான பிரதமராக அவர் தெரியவில்லை.
அவரை மலாய்க்காரர்களின் பிரதமர் என்றுகூட சொல்ல முடியாது. அவரின் அல்லக்கைகளுக்கு மட்டுமே அவர் பிரதமர். அரசாங்கம் சிறுபான்மை மக்களை ஒதுக்கிவைக்கும்போது அச்சிறுபான்மை மக்கள் குற்றங்களில் புகலிடம் தேடுகிறார்கள். எல்லா நாடுகளிலும் இதுதான் நிலைமை. அமெரிக்காவிலும்கூட.
படிப்பதற்கு சம வாய்ப்புகள் இல்லை. சிறு வணிகர்களுக்கும் உதவி கிடைப்பதில்லை. அரசாங்கத் துறைகளில் பணி புரிவோர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. அதில் இருப்போரும்கூட ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.
ரப்பரை வெட்டி நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த இந்தியர்கள் இன்று சாலையோரப் பட்டமரங்களாக நிற்கிறார்கள்.
கேஎஸ்என்: இந்நிலைக்கு அம்னோவும் மஇகாவும்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.அதற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இதற்கான காரணங்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்று லிம் கூறுவதை நானும் ஒப்புக்கொள்கிறேன். தோட்டத் துண்டாடல் ஒரு காரணம். அதன் விளைவாக அங்கிருந்து வெளியேறிய இளைஞர்களுக்கு வாழும் வகை தெரியாமல் போய்விட்டது. அதற்காகக் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதற்குத் தீர்வாகாது.