திரிபோலி : லிபியா முன்னாள் அதிபரும் சர்வதிகாரியுமான மும்மர் கடாபி பொது மக்களால் நடத்தப்பட்ட புரட்சியின் போது கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து அவரது ஆட்சி வீழ்ந்தது. இந்த நிலையில், கடாபியின் இளைய மகன் காமிஸ் அல் கடாபியும் கொல்லப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
மும்மர் கடாபியின் 7-வது மகன் காமிஸ். 27 வயதான இவர் கடாபியின் ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிந்தார். இவர் ராணுவ கமாண்டர் பொறுப்பு வகித்தார். மக்கள் போராட்டத்தின் போது பானி வாலிட் நகரத்தில் புரட்சி படையுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்டார்.
இந்த தகவலை லிபியா தேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஓமர் நொம்டன் நேற்று அறிவித்தார். இது தவிர வேறு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. சண்டையின் போது இவர் படுகாயம் அடைந்ததாகவும் அதன் பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததாகவும் அல் அரேபியா டி.வி. நிறுவனம் அறிவித்துள்ளது.
கடாபி கொல்லப்பட்டு கடந்த 20-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து தான் இத் தகவல் வெளியிடப்பட்டது. இதையடுத்து மில் ரதா நகர மக்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டாடினர். ஏனெனில் கடாபி ஆட்சி வீழ்வதற்கு முன்பு கடைசி 6 மாதம் இந்நகரம் காமினல் கடாபியின் ராணுவ பிடியில் இருந்தது. இதற்கிடையே காமினல் கடாபியின் ஆண்ணன் சயிப் அல் இஸ்லாம் குற்ற வழக்குகளுக்காக லிபியா சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.