பாஸ் கட்சியின் ஹுடுட் சட்டம் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாத பெண்களை கற்பழிப்பதற்கு ஊக்கமூட்டும் என மசீச கூறிக் கொள்வது மீதான தமது நிலையை தெளிவுபடுத்துமாறு பிரதமருக்கு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சவால் விடுத்துள்ளார்.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற மசீச ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் நஜிப் அப்துல் ரசாக் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டார். ஆனால் மசீச-வின் மகளிர் பிரிவு உதவித் தலைவி ஹெங் சியாய் கீ விடுத்த அறிக்கையை கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் ஆதரித்துப் பேசிய போது நஜிப் அமைதியாக இருந்தார் என அன்வார் கூறிக் கொண்டார்.
“மசீச தலைவர் தமது உரையில் இஸ்லாத்தை வெளிப்படையாக இழிவுபடுத்தினார். அப்போது நஜிப் புன்னகையுடன் அங்கு அமர்ந்திருந்தார்,” என்றும் அன்வார் சொல்லிக் கொண்டார்.
“பின்னர் தாம் உரையாற்றிய போதும் நஜிப் அது குறித்துக் கருத்து தெரிவிக்கவே இல்லை.”
“முஸ்லிம் என்ற முறையில் நஜிப்பின் கௌரவம் எங்கே போனது ?” என அன்வார் வினவினார்.
அவர் நேற்றிரவு கோலாலம்பூர் தாமான் மெலாவத்தியில் கருத்தரங்கு ஒன்றில் பேசினார்.