பிகேஆர்-ஆதரவு என்ஜிஓ-வான துந்துத்தான் பெமாண்டு டெக்சி மலேசியா (Tuntutan Pemandu Teksi Malaysia-டெக்சி), அரசாங்கம் தங்களின் 15-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர்.
அரசாங்கம் டெக்சி ஓட்டுநர்ககளின் நலனில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்று டெக்சி தலைவர் முகம்மட் ரிட்சுசான் முகம்மட் டாவுட் இன்று கேட்டுக்கொண்டார்.
டெக்சி ஓட்டுநர்களுக்கு தனித்தனியே உரிமம் வழங்கப்பட வேண்டும், வெளிநாட்டவர் டெக்சி ஓட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறை போன்ற நாள்களில் வாடகையை விட்டுக்கொடுக்க வேண்டும்.
“அரசாங்கம் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். டெக்சி ஓட்டுநர் எண்ணிக்கை சிறியதுதான். 50,000 இருக்கலாம். ஒரு டெக்சியில் ஒரு நாளில் 20 பயணிகள் பயணிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
“தேர்தல் பரப்புரைக் காலத்தில் இந்த டெக்சி ஓட்டுநர்கள் பக்காத்தானின் தூதர்களாக மாறினால் என்னவாகும்?”.
ஐம்பதாயிரம் டெக்சிகள், ஒரு டெக்சியில் ஒரு நாளில் 20 பயணிகள் என்றால் ஒரு மில்லியன் பயணிகளை(வாக்காளர்கள்) அணுகும் வாய்ப்பு கிடைக்கிறது. எனவே, இரண்டுவார தேர்தல் பரப்புரைக் காலத்தில் அவர்கள் பரப்புரை செய்ய முற்பட்டால் எதுவும் நிகழலாம் என்று ரிட்சுவான், இன்று அம்பாங் பிகேஆர் நாடாளுமன்றத் தொகுதி நடவடிக்கை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
ஜூன் 24-இல்,புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற டெக்சி ரக்யாட் 1மலேசியா கூட்டத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தனியார் நிறுவனங்களுக்கு டெக்சி உரிமங்கள் கொடுக்கும் இப்போதுள்ள முறையை “நவீன அடிமைத்தனம்” என்று வருணித்து அதை முடிவுக்குக் கொண்டுவர டெக்சி ஓட்டுனர்களுக்கே உரிமங்களை நேரடியாகக் கொடுக்க அரசாங்கம் திட்டமிடுவதாகக் கூறினார் .
5,000 டெக்சி ஓட்டுநர்கள் கலந்துகொண்ட அக்கூட்டத்தில், நாடு முழுவதுமுள்ள 70,000 டெக்சி ஓட்டுநர்களுக்கு டயர் வாங்க உதவியாக ரிம525 பற்றுச்சீட்டு வழங்கப்படும் என்றும் நஜிப் அறிவித்தார்.