மன உளைச்சலுக்கு ஆளான ஓர் அமைச்சரின் புலம்பல்

Kee Thuan Chye ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கட்டுரையின் தழுவல்.

ஐயா, அமைச்சராக இருப்பது இப்பல்லாம் லேசுபட்ட காரியமில்லேங்க.

நாலா பக்கங்களிலிருந்தும் சேற்றை வாரி வீசுறாங்க. ஒரு பக்கம் ஊடகங்கள், ஒரு பக்கம் முக நூல், ஒரு பக்கம் வலைப்பதிவுகள், ஒரு பக்கம் மாற்றரசுக் கட்சிகள். டாக்டர் மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் இப்படியெல்லாம் நடந்ததில்லீங்க. அமைச்சர்களைக் கேள்வி கேட்கும் துணிச்சல் எவருக்கும் இருந்ததில்லை. குறை சொல்லும் துணிவும் இருந்ததில்லை. ஆனால் இப்ப….

என்னமோ நாங்கள், பணத்தை அள்ளிக் கொட்டிக் கொள்வதுபோலப் பேசுறாங்க. சிங்கப்பூருடன் ஒப்பிட்டால் நாங்கள் வாங்குவது ஒரு சம்பளமே இல்லீங்க. சிலர் அதை நினைத்துப் பார்ப்பதில்லை. எங்களுக்கு அங்கிட்டு இருந்தும் இங்கிட்டு இருந்தும் கிம்பளம் வருவதாகச் சொல்றாங்க.

இப்ப மூசா அமானையும் ரிம40 மில்லியன் இணைச்சுப் பேசிறாங்க… அது அவருடைய பணமே அல்ல. அது அம்னோவின் பணம். அரசியல் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டது. அதிலே என்ன தப்பு? பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கே சொல்லிட்டாரே எல்லாம் முறையா நடந்திருக்குன்னு. அதுக்கு மேலே என்ன பேச்சு வேண்டியிருக்கு.

ஆனாலும் விட மாட்டுறாங்க. மைக்கல் சியா, ஹாங்காங்கிலிருந்து பணத்தைக் கொண்டுவரும்போது தடுத்து நிறுத்தப்பட்டதை வச்சு கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிங்கிறாங்க.

என்னென்னமோ பேசுறாங்க. ஆஸ்திரேலியாவில் உள்ள மூசாவின் மகன்களுக்கு மைக்கல் ரொம்ப நாளாவே பணம் கொடுத்து வருகிறாராம். எல்லாமே அவரைக் கெட்டவராகக் காண்பிக்கிற முயற்சிதான். மூசா ரிம40 மில்லியன் பற்றி எதுவும் சொல்லாம இருப்பதையும் குத்திக் காட்டுறாங்க. அதுக்காக அவரைக் குறை செல்ல முடியுமா?

நான் நினைக்கிறேன். இந்த விவகாரத்தில குறைச்சுப் பேசுறதுதான் நல்லதுன்னு.ஏன்னா, இந்தக் காலத்தில எதையும் பேசுறதுக்கு முன்னால நாலையும் யோசிச்சுப் பார்க்கணும்.

இல்லேன்னா, வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்க வேண்டியிருக்கும். பெர்சே 3.0-க்குப் பிறகு ஹிஷாமுடின் வாங்கிக் கட்டிக்கொண்டாரே, நினைவிருக்கா. போலீசார் ஊடகங்களின் கேமிராக்களிலிருந்தும் பொதுமக்களின் கேமிராக்களிலிருந்தும் நினைவக அட்டைகளைப் பறித்துக் கொண்டது ஏன் என்று ஊடகங்கள் கேட்க அதுதான் “நடைமுறைன்னு” அவர் சொல்லப்போக, பிய்ச்சு உதறிட்டாங்க.  அமைச்சருன்னு மரியாதைகூட கொடுக்கவில்லை. அவருக்குன்னு இல்ல. எந்த அமைச்சருக்குமே மரியாதை என்பதே இல்லாம போச்சு.

நாங்கல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டவுங்க தெரியுங்களா. சரி, சரி, சிலர் பிரதமராலே நியமிக்கப்பட்டவர்கள். ஒப்புக்கொள்றேன். ஆனால், அமைச்சருன்னா ஒரு மரியாதை கொடுக்கனுமில்ல. எங்கே கொடுக்கிறாங்க. பொழைப்பே நாறிப் போச்சு போங்க.

அதனால்தான் பிரதமரின் படத்துக்கும் அவரின் துணைவியாரின் படத்துக்கும் தன் பின்புறத்தைக் காண்பித்த ஒரு இளைனைக் கைது செய்தோம். மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் இப்படியெல்லாம் நடக்குமா?

அந்தக் காலம் வரணும். சமூக வலைத்தளத்தில் பாசீச அரசாங்கம் அது இதுன்னு சொல்றாங்க. சொல்லட்டும். எங்களுக்குக் காரியம் நடக்கனும்.

நான் ஹிஷாமுடினாக இருந்தால் உள்துறை அமைச்சராக இருக்க விரும்ப மாட்டேன். பாருங்க, தேசியப் பாதுகாப்பைக் கவனிக்கனும், குற்றச்செயல்களைக் கவனிக்கனும், மக்களின் பாதுகாப்பைப் பார்க்கனும். மக்களின் பாதுகாப்பு மக்களின் பொறுப்பு என்று சொல்லிவிட்டால் போதும் அடிக்க வருகிறார்கள்.

ஜோகூர் அம்னோ கோட்டை அங்கு பிகேஆர் செல்வது ஆபத்துன்னு சொன்னால் அதை இணையத் தளங்களில் வேறு மாதிரியாக திரிச்சுப் போட்டுறாங்க. ஜோகூரில பிகேஆருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாதுன்னு சொன்னதா போட்டுறாங்க. அப்புறம் ஒரு உள்துறை அமைச்சர் எப்படி அப்படிப் பேசலாமுன்னு கேள்வி கேட்கிறாங்க.

போர்டர்ஸ் தெரியுமா.. அது ஒரு புத்தகக் கடைதான். ஆனால்,  ஹிஷாமுடின்மீது வழக்கு தொடுத்திருக்கு. கெனேடிய முஸ்லிம் ஒருவர் எழுதிய நூலை அந்தக் கடையிலிருந்து ஜாவி பறிமுதல் செய்தது. அந்த விவகாரத்தில ஹிஷாம் உண்மை சொல்லவில்லை என்று அது கூறியுள்ளது. என்ன, தெனாவட்டு.

ஏன்..னா மட்டு மரியாதை இல்ல. அதுதான் பிரச்னை. பாவம், டாக்டர் இங் யென் யென். ராவுப்பில பசுமைப் பேரணி நடத்தினாங்க. நடத்தினது சரி, ஆனால், அதில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்  சுவரொட்டிகளில் இருந்த அவருடைய படத்த சப்பாத்தைக் கழட்டி அடிச்சிருக்காங்க, அது சரியா? அதுதான் ஹாங்காங் பாணியாம். ஹாங்காங் பாணி இங்கு எதுக்கு? அது நம்ம கலாச்சாரம் இல்லையே.

பார்த்தீங்களா, அமைச்சருன்னா எவ்வளவு இளக்காரமா போச்சுன்னு.லியோ தியோங் லாய்….அவர் என்னங்க செய்தார்? .ரிம24,000 கொடுத்து  WWW 15 நம்பர் பிளேட் வாங்க முயன்றார். அது மக்கள் பணம் என்றார்கள். இல்லை அதை இலவசமாகவே பெறும் உரிமை தமக்குண்டு என்றவர் விளக்க முயன்றார். அவர்கள் விடவில்லை. முடிவில் அதை வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டார்.

பார்த்தீங்களா, ஒரு நல்ல காரியம்தானே செய்தார்? அதாங்க, நாங்கள் ஒன்னும் அவ்வளவு மோசமானவுங்க இல்ல. பெர்சே 2.0 பேரணியின்போது துங் சின் மருத்துவமனை விவகாரத்தில் அவர் சொன்னதை வைத்து தியோங் லாயை ஒரு பொய்யர் என்றே இன்னுமும் சொல்றாங்க. நாங்க எப்பவும் பொய் சொல்றதில்லை. அடடா, தப்பா சொல்லிட்டேன். நாங்கள் பொய்யே சொல்வதில்லை ’ன்னு சொல்ல நினைத்து அப்படிச் சொல்லிட்டேன். பிரதமர் நஜிப் சரியாத்தானே சொன்னாரு, “அரசாங்கத்துக்கு மக்களை ஏமாத்தத் தெரியாது”ன்னு.

மக்கள் அதை உணரனும். நாங்கள் எப்பவும் எதையும் சிறப்பாகவே செய்து முடிக்கப் பார்ப்போம். ரயிஸ் யாத்திம்போல. அவர் ஒர் பழைய ஆசாமி. நீண்ட காலமாக நாட்டுக்கு உழைச்சவர். இருந்தாலும் அவரைவும் விட்டு வைக்கவில்லை. ‘Janji Ditepati’ பாடல் வரிகளை எழுதிய அவரைக் கேலி செய்தார்கள். அட, அவர் ஒரு கவிஞர் இல்லதான். பாட்டிலே கூட, குறைய இருக்கலாம். ஆனால், பாட்டை நல்ல நோக்கத்தோடத்தானே எழுதினாரு.

மெர்டேகா பேரணியை பெரிய சாதனையாக்கிக் காண்பிக்க முயன்றாரு. அதை முகநூலில் வெளியிட்டு எப்படியெல்லாமோ  கிண்டல் செய்தார்கள். அதையெல்லாம் இங்கே சொல்ல வேண்டாமுன்னு நினைக்கிறேன். அவர் அவருடைய இந்தோனேசிய பணிப்பெண்ணைக் கற்பழித்தாருன்னுகூட சொன்னாங்க.

இந்த மாதிரி பாலியல் விசயமுன்னா அவுங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். ஷாபி அப்டாலை ஒரு பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்படுத்திப் பேசினாங்க. அவருக்கு ஒரு வைப்பாட்டியாம்.மூணு ஆண்டுகளில அப்பெண்ணுக்கு ரிம1.5 மில்லியன் கொடுத்தாராம்.

ஒரு துணை அமைச்சர்; ஒரு கொலை

80-களில் துணை அமைச்சராக இருந்த ஒருத்தர் அவருடைய வப்பாட்டியைக் கொலை செய்தார் என்று ஒரு வதந்தி உலவியது. ஊடகங்களில் அது பத்தி அதிகம் செய்தி வரல. வதந்தி என்ற அளவிலதான் இருந்தது. வெளிப்படையாக யாரும் அதைப் பத்திப் பேசவில்லை. யார்மீதும் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. அந்தத் துணை அமைச்சர் பிறகு முழு அமைச்சராகக்கூட பதவி உயர்வு பெற்றார்.

இப்ப என்னான்னா….நஸ்ரியின் மகன்- அவர் பேர் என்ன….அங்… நெடிம்…. அவரது விவகாரத்தைகூட பொதுவில் கொண்டு வந்துவிட்டார்கள். கொண்டோமினிய பாதுகாப்புக் கண்காணிப்பாளரை  அடித்த அவர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கலன்னு கேட்கிறாங்க. கண்காணிப்பு கேமிராக்கள் நெடிம் அம்மனிதரின் கழுத்தைப் பிடித்து நெரிப்பதையும் தலையில் குத்துவதையும் காண்பிப்பதாக சொன்னாங்க.

ஆனால், நெடிம் அதில் சம்பந்தப்படவில்லை என்பதைதான் கேமிராக் காட்டுவதாக போலீஸ் கூறியது. யார் சொல்றதை நம்புவது? போலீஸ் பொய் சொல்லுமா? ஒருகாலும் சொல்லாது. அதுபோக ஹிஷாமும் வழக்கு அமைதியான முறையில் தீர்க்கப்பட்டதாக சொல்லிட்டாரு. அப்புறம் என்ன வழக்குத் தீர்ந்து போச்சு.

எந்த அமைச்சரையும் விட்டு வைப்பதில்லை. நஜிப்பைக்கூட. ஒரு கண்காட்சி சென்ற நஜிப்பிடம் ஒரு மாணவன் najis mughallazah வுக்கு எடுத்துக்காட்டு கூறுமாறு கேட்டான். நஜிப்புக்கு விடை தெரியவில்லை. அந்தக் காணொளியை  அப்படியே இணையத்தளத்தில் உலவவிட்டு பிரதமருக்கு பதில் தெரியவில்லை என்று கேலி செய்தார்களய்யா.

சரி, பெரியவர் மகாதிரை மட்டும் விட்டு வைக்கிறார்களா? அவர் வாயைத் திறந்து ஏதாவது சொன்னால் போதும் வரிந்து கட்டிக்கொண்டு சாடுறாங்க. அவருக்கு 87 வயதாகிறது. நம் பிரதமராக இருந்தவர். மூத்தவர் என்றாவது அவரை மதிக்க வேண்டுமா, இல்லையா? அதுதானே நம்ம கலாச்சாரம்.

முன்பின்தெரியாதவர்களுக்கு  வாக்களிப்பதைவிட தெரிந்த பேய்களுக்கு வாக்களிப்பதே மேல் அப்படின்னு அவர் ஒரு வார்த்தை சொன்னாருங்க அன்னையிலிருந்து மக்கள் எங்களை “பேய்கள்”ன்னுதான் அழைக்கிறாங்க.

நாங்கள் பேய்கள் அல்ல. மக்களுக்குச் சேவை செய்ய வந்தவர்கள்.

எனக்கு ஒன்னும் சொல்லத் தோனல. 13வது பொதுத் தேர்தல வென்றாலும் ஆட்சி செய்வது சிரமமாகத்தான் இருக்கும். சின்ன விசயமானாலும் தெருவில் இறங்கிடுகிறாங்க ஆர்ப்பாட்டம் செய்ய. பொதுப்பேரணி சட்டம் இருந்தால் என்ன, போலீஸ் இருந்தால் என்ன? எதைப் பத்தியும் கவலைப்படுறதில்ல. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பருந்து மாதிரி உன்னிப்பாக பார்த்துக்கிட்டே இருப்பாங்க. அதையெல்லாம் நினைக்கும்போது வெறுத்துப்போச்சய்யா. எல்லாத்தையும் உதறிவிட்டு விலகி விடலாம் போலத் தோனுது.

====================================================================================

KEE THUAN CHYE:  ‘No More Bullshit, Please, We’re All Malaysians’என்ற நூலின் ஆசிரியர்.

TAGS: