இரண்டு இடங்களை வைத்துள்ள கட்சிப் பேராளர்கள் அடுத்த தேர்தலில் ஒரே ஒரு இடத்தை மட்டும் தேர்வு செய்வதாக அறிவிக்க வேண்டும் என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
“சிறப்புத் தன்மையுடைய’ சூழ்நிலைகளில் மட்டுமே ஒரு வேட்பாளர் அதாவது மாநிலச் சட்டமன்றத் தொகுதியிலும் நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிடலாம் என கட்சியின் மத்திய நிர்வாகக் குழு தனது கூட்டம் ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
கட்சித் தலைவரும் கட்சித் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கும் அத்தகைய சிறப்புத் தன்மையுடையவர்களாக கருதப்படலாம் எனத் தாம் எண்ணுவதாக கர்பால் மேலும் சொன்னார்.
“சிறப்புத் தன்மையுடையது” என்னும் சொல் அதன் முழு அர்த்தத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். இப்போது இரண்டு இடங்களை வைத்துள்ள கட்சிப் பேராளர்கள் அடுத்த தேர்தலில் ஒரே ஒரு இடத்தை மட்டும் தேர்வு செய்வதாக அறிவிப்பது மிகவும் முக்கியமானது.”
“அவர்கள் குறிப்பாக பக்காத்தான் ராக்யாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அதனைச் செய்ய வேண்டும்,” என அவர் பார்லிமில் நிருபர்களிடம் கூறினார்.
என்றாலும் வேட்பாளர்கள் எந்த இடத்தை கை விட வேண்டும் என முடிவு செய்வது கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவைப் பொறுத்தது என்றார் கர்பால்.
அதனைச் செய்வது சிரமமாக இருக்காது எனக் குறிப்பிட்ட அவர், ஏனெனில் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தொகுதிக்கும் நாடாளுமன்றத் தொகுதிக்கும் போட்டியிடுவது பொது நலனுக்கு ஏற்றதல்ல என்றார் அவர்.
கடந்த காலத்தில் முன்னாள் பினாங்கு முதலமைச்சர் லிம் சொங் இயூ மாநில நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதற்காக தமது இடங்களில் ஒன்றை கை விட்டதை கர்பால் நினைவு கூர்ந்தார்.
சொங் இயூ அப்போது பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினராகவும் தஞ்சோங் எம்பி-யாகவும் இருந்தார்.
“தாங்கள் போர் நிலையில் இருப்பதாக மசீச அறிவித்துள்ளது. அதே போன்று பக்காத்தானும் அதே நிலையை அடைய முயற்சிக்க வேண்டும்,” புக்கிட் குளுகோர் எம்பி-யுமான அவர் சொன்னார்.
“அதே வேளையில் முதலமைச்சரைப் போன்று விதி விலக்குகளும் உண்டு. அவர் கூட்டரசு மாநில அரசாங்க விவகாரங்களை நேரடியாகக் கையாள முடியும்,” என அந்த மூத்த வழக்குரைஞர் சொன்னார்.
வேட்பாளர்களுக்குப் பஞ்சமில்லை
டிஏபி-யில் இரண்டு இடங்களை மொத்தம் 9 பேராளர்கள் வைத்துள்ளனர். அவர்களில் மூவர் பினாங்கைச் சார்ந்தவர்கள். லிம்-உடன் துணை முதலமைச்சர் பி ராமசாமி மாநில டிஏபி தலைவர் சாவ் கோன் இயாவ் ஆகியோரே அவர்கள்.
ராமசாமி பத்து காவான் எம்பி-யும் பிராய் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். சாவ் தஞ்சோங் நாடாளுமன்றத் தொகுதியையும் பாடாங் கோத்தா சட்டமன்றத் தொகுதியையும் பிரதிநிதிக்கிறார்.
டிஏபி-யில் வேட்பாளர்களுக்கு இப்போது பஞ்சமில்லை என்பதால் இடங்களை விட்டுக் கொடுப்பதில் எந்தச் சிரமமும் இருக்காது என கர்பால் மேலும் கூறினார்.
“நாம் மகத்தான வளர்ச்சியைக் கண்டுள்ளோம். சாத்தியமான பல வேட்பாளர்கள் உள்ளனர். 1990ம் ஆண்டு நாம் பினாங்கில் மாநில அரசாங்கத்தை பிடிக்க முயற்சி செய்தோம். இரண்டு இடங்களை வைத்திருந்த நானும் லிம் கிட் சியாங்கும் எங்களுடைய பாதுகாப்பான இடத்தை விட்டுக் கொடுத்தோம்.”
அப்போது தாம் மாநிலத் தொகுதியாக இருந்த புக்கிட் குளுகோரையும் லிட் சியாங் முன்னாள் முதலமைச்சர் கோ சூ கூனை பாடாங் கோத்தாவில் எதிர்ப்பதற்காக கம்போங் கோலாமையும் விட்டுக் கொடுத்ததாகவும் கர்பால் சொன்னார்.
“பதற்ற நிலையை ஏற்படுத்துவது இந்த வேண்டுகோளின் நோக்கமல்ல. மாறாக கட்சியின் நலனுக்காக, ஆர்வம் காட்டியுள்ள சாத்தியமான வேட்பாளர்களுடைய நலனுக்காக அவ்வாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது,” என்றார் அவர்.