மாஹ்புஸ்: நாங்கள் அயதுல்லாக்கள் அல்ல; குறை கூறல்களை ஏற்கத் நாங்கள் தயார்

முன்னாள் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் அஞ்சுவது போல பாஸ் கட்சி குறை கூறல்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் சமயத் தலைவர்களை வைக்காது. அதனால் அது அயதுல்லாக்களைப் போல மாறாது என கட்சித் துணைத் தலைவர் மாஹ்புஸ் ஒமார் கூறியுள்ளார்.

பாஸ் கட்சி மற்றவர்களுடைய கருத்துக்களுக்கும் குறை கூறல்களுக்கும் தனது கதவுகளை ஒரு போதும் மூடியதில்லை என மாஹ்புஸ் சொன்னதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

கட்சியின் போராட்டங்களுக்கான நிலைக்களனாக திறந்த போக்கு தொடர்ந்து இருந்து வரும் என அவர் உறுதி அளித்தார்.

“அஸ்ரி மற்ற நோக்கங்கள் ஏதுமில்லாமல் கௌரவமாக  உண்மையாக அதனை நினைவூட்டியிருக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன்.”

‘இன்று கூட நாங்கள் சொல்லும் உண்மைகளை முக்கிய நாளேடுகள் திரித்துப் போடுகின்றன. அதற்காக நாங்கள் ஆத்திரப்படவில்லை. நாங்கள் எப்போதும் ஆக்கப்பூர்வமாக நல்ல முறையில் பதில் அளித்து வருகிறோம்,” என அவர் சொன்னதாக அந்த ஏடு குறிப்பிட்டது.

இதனிடையே மாஹ்புஸ் சொன்னதை ஒப்புக் கொண்ட இன்னொரு பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப், பாஸ் உறுப்பினர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படையாகத் தெரிவிக்கலாம் எனச் சொன்னார்.

பாஸ் கட்சி ஈரானின் அயதுல்லாக்களைப் பின்பற்றக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் ஊழல் மோசமடையும் என்றும் கடந்த செவ்வாய்க்கிழமை கருத்தரங்கு ஒன்றில் பேசிய அஸ்ரி எச்சரித்திருந்தார்.

அந்தக் கருத்தரங்கில் அனுசரணையாளராக இருந்தவர் தொடுத்த கேள்வி நியாயமற்றது என்றும் அதற்கு அஸ்ரி பதில் அளித்தது மிதமிஞ்சியது என்றும் பாஸ் உலாமா தகவல் பிரிவுத் தலைவர் நிக் முகமட் ஸவாவி சாலே சாடியுள்ளார்.

பாஸ் உலாமாக்களைக் குறை கூற முடியாது என்னும் தமது கூற்றுக்கு அந்த அனுசரணையாளர் ஆதாரத்தைக் காட்டவில்லை என அவர் கட்சி ஏடான ஹராக்கா டெய்லியில் எழுதியுள்ளார்.

ஈரானியர்கள் ஷியா முஸ்லிம்கள் என்பதையும் மலேசிய முஸ்லிம்கள் சன்னி இஸ்லாமிய சிந்தனையை பின்பற்றுகின்றவர்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

“அந்த இரண்டு சிந்தனைகளும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை. ஷியா சிந்தனை அயதுல்லாவின் கட்டளைகளை நபிகள் நாயகத்தின் கட்டளைகளை விட மேலானதாகக் கருதுகின்றது.”

“ஆகவே அயதுல்லாக்களைத்  தொட முடியாது, குறைகூற முடியாது என்பது புதிய விஷயம் அல்ல.”

பாஸ் கட்சியின் உலாமா பிரிவு குறைகூறல்களை ஏற்றுக் கொள்ளாது என்ற தோற்றத்தை அஸ்ரியின் கருத்துக்கள் தரக் கூடாது. காரணம் அந்தக் கூற்றுக்கு ஆதாரமோ எடுத்துக்காட்டோ இல்லை என நிக் முகமட் மேலும் கூறினார்.

 

TAGS: