தேசியக் கல்விப் பெருந்திட்டத்துக்கு எதிராக டோங் ஜோங் பேரணி

2013-2025 தேசியக் கல்வி பெருந்திட்டம் குறித்த பூர்வாங்க அறிக்கையை ஆட்சேபித்து டோங் ஜோங் என்னும் சீனக் கல்வி போராட்டக் குழு நவம்பர் 25ம் தேதி பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அந்த பெருந்திட்டம் பன்மொழிக் கல்விக்கு சாதகமானதாக இல்லை என்று அந்த அமைப்பு வருணித்தது.

பெட்டாலிங் ஜெயா பாடாங் திமோரில் காலை மணி 11க்கு அந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என டோங் ஜோங் தலைவர் யாப் சின் தியான் சொன்னதாக சின் சியூ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாண்டு டிசம்பர் மாத இறுதி வாக்கில் அந்தப் பெருந்திட்டம் இறுதியாக்கப்படவிருப்பதால் அந்த விவகாரம் மிகவும் அவசரமானது என அவர் சொன்னார்.

“நாம் டிசம்பர் மாதம் பெருந்திட்ட்டம் இறுதியாக்கப்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடைய கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக நமது யோசனைகளை சமர்பிக்க வேண்டும்.”

“அந்த அமைதியான கூட்டத்தில் நாடு முழுவதையும் சேர்ந்த மக்களும் கலந்து கொள்வர் என நாங்கள் நம்புகிறோம்.”

அவர் நேற்றுன் பெர்லிஸில் கூட்டம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

சீனக் கல்வியின் தலைவிதியை பெருந்திட்டம் நிர்ணயிக்கும் என்பதால் நமது யோசனைகளை அரசாங்கம் பரிசீலிப்பதற்கு உதவியாக தொடர் நடவடிக்கைகள் அவசியமாகும் என்றும் யாப் வலியுறுத்தினார்.

தாய் மொழிக் கல்வி புறக்கணிக்கப்பட்டுள்ளது

தேசியக் கல்விப் பெருந்திட்டத்தின் பூர்வாங்க அறிக்கையை சீனக் கல்வி அமைப்புக்கள் ஆட்சேபித்துள்ளன.

தேசிய மொழியைக் கற்பதற்கும் போதிப்பதற்கு அதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தாய்மொழிக் கல்வி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவை கூறுகின்றன,

தாய் மொழிப் பள்ளிகளில் மலாய் மொழியைப் போதிப்பதற்கு தேசிய பள்ளிக்கூடப் பாடத் திட்டத்தை பயன்படுத்தும் யோசனையும் அவற்றுள் அடங்கும். அதற்காக போதனை நேரத்தை வாரம் ஒன்றுக்கு 270 நிமிடங்களாக அதிகரிக்க அந்தத் திட்டம் வகை செய்கின்றது.

1956ம் ஆண்டு வெளியிடப்பட்ட ரசாக் அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ள “இறுதிக் குறிக்கோளை” அடையும் அரசாங்கத் திட்டத்தின் ஒரு கூறாக அது இருக்கலாம் என டோங் ஜோங்கும் மற்ற அமைப்புக்களும்  அஞ்சுகின்றன.

மலாய் மொழியை முக்கிய போதானா மொழியாகக் கொண்ட ஒரே பள்ளி முறையை உருவாக்குவது அந்த “இறுதிக் குறிக்கோளாகும்”.

சீன சுயேச்சைப் பள்ளிக்கூடங்கள் உட்பட அனைத்து மொழி பள்ளிக் கூடங்களையும் நியாயமாக நடத்துமாறும் தேசியக் கல்விப் பெருந்திட்டத்தின் ஒர் அங்கமாக அவற்றை ஏற்றுக் கொள்ளுமாறும்  அவை அரசாங்கத்தைக்  கேட்டுக் கொண்டன.

TAGS: