பினாங்கு முதலமைச்சர் மன்னிப்பு கேட்டார்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், ஜோகூரில் நிலவும் குற்ற விகிதம் குறித்துக் கருத்துரைத்து அதனை இழிவுபடுத்தியதற்காக ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டரிடம் இன்று மன்னிப்பு கேட்டார்.

சுல்தானிடம் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக, சுல்தானிடமும் அவரின் குடிகளாகிய ஜோகூர் மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக லிம் குறிப்பிட்டார்.

“ஜோகூரையோ வேறு எந்த மாநிலத்தையோ அவமதிக்கும் எண்ணம் எனக்கில்லை.” இன்று பினாங்கில் கூட்டப்பட்ட அவசர செய்தியாளர் கூட்டமொன்றில் லிம் இவ்வாறு கூறினார்.

“அரசியலை அரசியல்வாதிகளிடம் விட்டுவிட வேண்டும், ஆட்சியாளர்களை அரசியலுக்குள் இழுக்கக்கூடாது என்று சுல்தான் கூறியுள்ளார். அதை நான் ஏற்கிறேன்.

“நான் சொன்னதை பிஎன் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் திரித்துக் கூறிவிட்டன என்றே கருதுகிறேன்”, என்றாரவர்.

இன்று த ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டில் வெளியிடப்பட்டிருந்த சுல்தானுடனான நேர்காணலில் லிம்மின் சிங்கப்பூர் பேச்சு குறித்து சுல்தான் கருத்துத் தெரிவித்திருந்தார். அதன் தொடர்பில்தான் லிம் இவ்வாறு கூறினார்.

லிம்மின் செய்தியாளர் கூட்டம் ஏழு நிமிடம்தான் நீடித்தது.

அவர் தம் அறிக்கையை மலாய்மொழியிலும் வாசித்தார். சுல்தானைச் சினமுற வைத்ததற்காக வருத்தமடைவதாகவும் அவர் தெரிவித்தார். 

சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டர் அந்த நேர்காணலில், லிம் சிங்கப்பூர் சென்றிருந்தபோது ஜோகூர் மாநிலம் ஆபத்தானது என்றும் ஆள்கள் கடத்திச்செல்லபப்டும் அபாயம் அங்கு உண்டு என்றும் கூறியது தம் “மனத்தைப் புண்படுத்தி” விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். 

நேற்று லிம்மிடம், அவர் ஜோகூரைப் பற்றி அப்படியொரு கருத்துச் சொல்வது போன்ற ஒலிப்பதிவு ஒலிபரப்பட்டதைசு சுட்டிக்காட்டியபோது அவர் அதை ஒப்புக்கொள்ளவுமில்லை மறுக்கவுமில்லை.

தாம் சிங்கப்பூரில் கலந்துகொண்டது ஒரு தனிப்பட்ட விருந்து நிகழ்வு என்று லிம் கூறினார்.

அந்தப் பேச்சில் உண்மையில் தெரிவிக்கப்பட்ட கருத்து என்னவென்பதைக் கண்டறிய தாம் நீதிமன்றம் செல்லப்போவதாகவும் அவர் கூறினார்.

டிவி3-இல் ஒலியேறியதாக சொல்லப்படும் இந்த ஒலிப்பதிவைத் தவிர, தாம் சிங்கப்பூரில் அல்லது ஆஸ்திரேலியாவில் ஆற்றிய உரை தொடர்பில் இதுவரை பத்திரிகை அறிக்கை என்று எதுவும் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று லிம், தம் உரையின் பிரதிகளைச் செய்தியாளர்களுக்கு வழங்கினார்.அதில் ஜோகூரைப் பற்றி அப்படிப்பட்ட கருத்து எதுவும் இல்லை.

“ஆஸ்திரேலிய வானொலிக்கு அளித்த நேர்காணலின் ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது.

“சிங்கப்பூரில் தனிப்பட்ட நிகழ்வில் நான் பேசியதாகக் கூறப்படுவதன் ஒலிப்பதிவைப் பெற முயற்சி செய்கிறேன்.”

பிஎன் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு தம் வழக்குரைஞர்களிடம் கூறியுள்ளதாகவும் லிம் தெரிவித்தார். முதல் வழக்கு பெர்னாமாவுக்கு எதிரானதாக இருக்கும்.

அதன்பின்னர் அது ஒரு சட்ட விவகாரம் என்று கூறிய அவர், அது  பற்றி மேல்விவரம் எதுவும் தெரிவிக்க மறுத்தார்.

TAGS: