இன்று மக்களவையில் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிலாங்கூர் அரசு கடந்த நான்காண்டுகளில் சேர்த்து வைத்துள்ள ரிம2.2பில்லியனைச் செலவிட வேண்டும் என்று மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமைக் கேட்டுக்கொண்டனர்.
பக்காத்தான் ஆட்சியில் சிலாங்கூர் அரசாங்கம் சிறப்பாகச் செயல்படுவதாக பாராட்டிய அம்பாங் எம்பி சுரைடா கமருடின், கையிருப்பில் உள்ள பணத்தைச் செலவிட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும் என்றார்.
“மாநிலத்தில் நடப்பில் உள்ள அரசை நிலைபெறச் செய்யும் வழிமுறைகளில் அப்பணத்தைச் செலவிட வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்”, என்று சிலாங்கூர் பிகேஆர் துணைத் தலைவருமான சுரைடா கூறினார்.
அதன் தொடர்பில் அப்பணத்தைச் செலவிடும் வழிமுறைகளை வரையறுக்கும் செயல்திட்டம் ஒன்றை பிகேஆர் காலிட்டிடம்(வலம்) வழங்கும் என்றாரவர். அத்திட்டத்தில் ஊராட்சி மன்ற ஒதுக்கீடுகளை அதிகரித்தல், மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தித் தரல், குப்பை நிர்வாகம், கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்தல், குறைந்த விலை அடுக்குமாடி வீடுகளுக்கு புதுச்சாயம் அடித்தல் முதலியவை இடம்பெற்றிருக்கும்.
அவ்விசயத்தில் சுரைடா முன்மொழிந்ததை காப்பார் எம்பி எஸ். மாணிக்கவாசகமும் பெட்டாலிங் செலாத்தான் எம்பி ஹீ லோய் சியானும் வழிமொழிந்தனர்.
“பெரும் பணம் கையிருப்பில் இருக்குமானால் அதைச் செலவிட இதுவே தக்க தருணமாகும்”, என்று மாணிக்கவாசகம் கூறினார்.
“என்னுடையதுதான் மிக அதிகமான வாக்காளர்களைக்கொண்ட மிகப் பெரிய நாடாளுமன்றத் தொகுதி. ஆனால், இங்கு சாலைகள் சரியாக இல்லை.. குப்பைகளை அகற்றும் பணியிலும் பல பிரச்னைகள்.
“கையிருப்பில் பணம் இருக்குமானால், மக்களுக்காக அதை உடனடியாக செலவு செய்யுங்கள்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
திறந்த டெண்டர்முறையால் பிரச்னைகள்
குப்பை அகற்றுவதில் சில பிரச்னைகள் இருப்பதாக ஹீ குறிப்பிட்டார்.
“திறந்த டெண்டர்முறை சில நேரங்களில் சரிப்படுவதில்லை. குறைந்த விலையைக் குறிப்பிடும் குத்தகையாளர்களுக்கு குத்தகையைக் கொடுக்கிறோம்.
“குறைந்த விலையைக் குறிப்பிடும் பலரால் வேலையைச் செய்துகொடுக்க முடிவதில்லை”, என்று குறிப்பிட்ட ஹீ ஊராட்சிக்குப் பொறுப்பான ரோனி லியு இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
இதையெல்லாம் பக்காத்தான் எம்பிகள் சிலாங்கூர் அரசிடமே நேரடியாகத் தெரிவித்திருக்கலாமே என்று சொன்னதற்கு, “அதையும் செய்திருக்கிறோம். கையிருப்பில் ரிம2.2 பில்லியன் வைத்துள்ள சிலாங்கூர் அரசை நாடாளுமன்றத்தில் பாராட்டவும் அப்பணத்தை மக்களுக்காக செலவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளவும் விரும்பினோம்.அதுதான் இப்படி”, என்று சுரைடா கூறினார்.