உணவுக்கு முன்னர் துவா ஒதாமல் இருந்ததற்காக நான்கு ஒராங் அஸ்லி பிள்ளைகளை அவர்கள் ஆசிரியர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுவதை கிராமப்புற வட்டார மேம்பாட்டு அமைச்சர் ஷாபீ அப்டால் மறுத்துள்ளார்.
பெற்றோர்களுடைய அனுமதி இல்லாமல் குவா மூசாங்கில் உள்ள போஸ் பிஹாய் தேசியத் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு-அவர்கள் அனைவரும் முஸ்லிம் அல்லாதவர்கள்-இஸ்லாமியப் பாடம் போதிக்கப்பட்டதாக கூறப்படுவதையும் அவர் நிராகரித்தார்.
“முறையான கல்வி வழியாகவோ அல்லது தொழுகைகள் வழியாகவோ சமயக் கல்வியை மாணவர்கள் எடுக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல என்றும் ஷாபீ அப்டால் சொன்னார்.
“சில வேளைகளில் அந்த விஷயங்களுக்கு அரசியல் சாயம் பூசப்படுகின்றன. கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் சம்பவம் நிகழவே இல்லை,” என அவர் இன்று காலை நிருபர்களிடம் கூறினார்.
உண்மை நிலவரங்கள் அடிப்படையில் பிரச்னையைத் தீர்ப்பதற்கு தமது அமைச்சு உறுதி பூண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
“இது ஒரு பிரச்னையே அல்ல. புகார் ஏதும் இருந்தால் அது தீர்க்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். பகை உனர்வைத் தூண்டுவதற்காக சில விஷயங்கள் எழுப்பப்படுவதால் நாங்கள் உண்மையைக் கண்டறிய வேண்டியுள்ளது,” என அவர் சொன்னார்.
இதனிடையே அந்த விவகாரம் மீது சம்பந்தப்பட்ட பெற்றோர்களுடன் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒராங் அஸ்லி மேம்பாட்டுத் துறை இயக்குநர் முகமட் சானி மிஸ்டாம் கூறினார்.
நாளை ஏற்பாடு செய்யப்பட்டு அந்தக் கூட்டத்துக்கு மாவட்ட கல்வித் துறையும் மனித உரிமை ஆணையமும் அழைக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் அந்தச் சம்பவம் பற்றிப் போலீசில் புகார் செய்வதற்காக போஸ் பிஹாய் முஸ்லிம் அல்லாத ஒராங் அஸ்லி சமூகத்தைச் சேர்ந்த மூன்று தந்தையர்கள் மூன்று மணி நேரம் பயணம் செய்து குவா மூசாங் சென்றனர்.
அக்டோபர் 23ம் தேதி நண்பகல் உணவுக்கு முன்னர் துவா சொல்லத் தவறியதற்காக ஆண் ஆசிரியர் ஒருவர் தங்களது நான்கு 12 வயது பெண் பிள்ளைகளை கன்னத்தில் அறைந்ததாக அவர்கள் கூறிக் கொண்டனர்.
முழுக்க முழுக்க ஒராங் அஸ்லி பிள்ளைகள் படிக்கும் போஸ் பிஹாய் தேசியப் பள்ளியில் பிள்ளைகளுக்கு இஸ்லாமியக் கல்வி போதிக்கப்படுவது பற்றி தங்களுக்கு அந்த வாரம் தொடக்கம் வரையில் தெரியாது என்றும் அவர்கள் கூறிக் கொண்டனர்.