அமெரிக்க அதிபர் தேர்தல் : வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு ‘இலவசங்கள்’ அறிவிப்பு

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில், வாக்களிப்பில் கலந்துகொள்ளும் வாக்காளர்களுக்கு, இலவச யோகா பயிற்சி அளிக்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், வரும் 6ம் தேதி, அதிபர் தேர்தல் நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஒபாமா இரண்டாவது முறையாக, இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசு கட்சி சார்பில், மாசாசூசெட்ஸ் மாகாண முன்னாள் முதல்வர் மிட்ரோம்னி போட்டியிடுகிறார்.

இருவரும் தீவிர பிரசாரம் செய்து வந்த நிலையில், தற்போது, ‘சாண்டி’ புயல் இவர்களது பிரசாரத்துக்கு தடை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே வாக்காளர்களை கவர்வதற்காக, பல்வேறு நிறுவனங்கள் இலவச பொருட்களை அறிவித்துள்ளன. வாஷிங்டனில் உள்ள யோகா பயிற்சி மையம், வாக்களிப்பில் கலந்துகொள்ளும் வாக்காளர்களுக்கு, இலவச பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.

‘வாக்களித்தற்கான அடையாளத்தை காட்டி, இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்’ என, மைசூரை சேர்ந்த, இந்த யோகா பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

இதே போல, ‘பிசா ஹட்’ நிறுவனம் இலவசமாக பீட்சாவையும், சுடசுட காபியையும் வாக்காளர்களுக்கு, வழங்குவதாக தெரிவித்துள்ளது. ‘ஜெட் ப்ளு’ நிறுவனம் இலவச விமான சேவையை அறிவித்துள்ளது.